Sivananda rk
கடவுளுடன் வாழ்ந்தவர்கள்
பாகம் 01
ஸ்ரீராமகிருஷ்ணரும் அவரது துறவிச் சீடர்களும்
சுவாமி பிரம்மானந்தர்
சுவாமி சிவானந்தர்
சுவாமி பிரேமானந்தர்
சுவாமி யோகானந்தர்
சுவாமி நிரஞ்ஜனானந்தர்
சுவாமி ராமகிருஷ்ணானந்தர்
சுவாமி சாரதானந்தர்
சுவாமி துரீயானந்தர்
சுவாமி அத்புதானந்தர்
சுவாமி அபேதானந்தர்
சுவாமி திரிகுணாதீதானந்தர்
சுவாமி அத்வைதானந்தர்
சுவாமி சுபோதானந்தர்
சுவாமி அகண்டானந்தர்
சுவாமி விஞ்ஞானானந்தர்
1. பிற்சேர்க்கை (கலைச் சொற்கள்)
2. நபர்கள்
3. பிரம்ம சமாஜம்
பாகம் 02
ஸ்ரீராமகிருஷ்ணரும் அவரது இல்லறச் சீடர்களும் சிஷ்யைகளும்
ராணி ராசமணி
மதுராநாத் விஸ்வாஸ்
ஹிருதயராம் முகோபாத்யாயர்
லட்சுமி தேவி
சம்பு சரண் மல்லிக்
ராம் சந்திர தத்தர்
மனமோகன் மித்ரா
சுரேந்திரநாத் மித்ரா
பலராம் போஸ்
சுனிலால் போஸ்
யோகின்மா
கௌரிமா
பிரதாப் சந்திர ஹாஸ்ரா
மகேந்திர நாத் குப்தர் (ம-)
துர்க்கா சரண நாகர்
சுரேஷ் சந்திர தத்தர்
நவகோபால் கோஷ், நிஸ்தாரிணி தேவி
அதர்லால் சேன்
கிரீஷ் சந்திர கோஷ்
காளிபாத கோஷ்
உபேந்திரநாத் முகோபாத்யாயர்
ஹரமோகன் மித்ரா
கோபாலேர்மா
அட்சய் குமார் சேன்
மணீந்திர கிருஷ்ண குப்தா
பூர்ண சந்திர கோஷ்
பவநாத் சட்டோபாத்யாயர்
தேஜ் சந்திர மித்ரா
நரேந்திர நாத் மித்ரா (சிறிய நரேன்)
சுவாமி சிவானந்தர்
சிலர் திருமணத்தைப் பந்தமாக நினைக்கிறார்கள்; திருமணமாகிவிட்டால் ஆன்மீக வாழ்க்கையை மேற்கொள்ள முடியாது என்று எண்ணுகிறார்கள். ஆனால் இந்து மதத்தைப் பொறுத்தவரையில் திருமணம் புனிதமானதாகக் கருதப்படுகிறது. தெய்வங்கள், அவதாரங்கள், ஏன் மகான்களில் பலர்கூட திருமணம் ஆனவர்களே. திருமண வாழ்க்கை நல்லதல்ல என்றோ, புனிதமானது அல்ல என்றோ நமது ரிஷிகள் நினைத்திருந்தால் அதை அப்போதே சொல்லியிருப்பார்கள். அதற்கு மாறாக, சமுதாயச் சட்டங்களை வழங்கிய ரிஷிகள் வாழ்க்கையின் நான்கு நிலைகளை ஏற்றுக்கொள்கிறார்கள். அவற்றை பிரம்மச்சரிய ஆசிரமம் (மாணவப் பருவம்), கிருஹஸ்த ஆசிரமம் (இல்லற வாழ்க்கை), வானப்ரஸ்த ஆசிரமம் (வன வாழ்க்கை), சன்னியாச ஆசிரமம் (துறவு வாழ்க்கை) என்று வகுத்துள்ளார்கள். அதேவேளையில், விருப்பமும் தகுதியும் இருந்தால், யாராக இருந்தாலும் மற்ற ஆசிரமங்களைத் தாண்டி நேரடியாகவே துறவு வாழ்க்கையை மேற்கொள்ளலாம் என்பதையும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
இல்லற வாழ்க்கையை ஏற்றுக்கொண்டாலும், எப்படி அதனை ஆன்மீக வாழ்வாக மாற்றிக்கொள்வது என்பதை ஸ்ரீராமகிருஷ்ணர் தமது திருமண வாழ்க்கையின் மூலமாக உலகிற்குக் காட்டினார். அவரது துறவிச் சீடர்களிலும் நான்கு பேர் திருமணம் ஆனவர்கள். சுவாமி சிவானந்தர் (தாரக்) அவர்களில் ஒருவர்.
தாரக் தமது விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்துகொள்ள நேர்ந்தது. இளைய மகளான நிரோதாவின் திருமணத்தை நடத்துவதற்கு வரதட்சிணை கொடுக்கப் போதிய வசதியில்லாததால், மணமகனின் தங்கையைத் தாரக்கிற்குப் பேசி முடித்தார் அவனது தந்தை. இதனால் இரண்டு வீட்டாரும் வரதட்சிணை தர வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. தாரக்கின் மனைவி நித்தியகாளி மிகவும் நல்லவள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக திருமணம் நடந்த ஒரு வருடத்திற்குள் அவள் இறந்துபோய்விட்டாள்.
திருமணமாகியிருந்தாலும் தாரக் வழுவாத பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்தார். இதனால் மகாபுருஷ் (பெரிய மகான்) என்று அழைக்கப்பட்டார். குருதேவர் தாரக்கின் உடலைத் தொட்டு, “சச்சிதானந்தப் பெருங்கடலில் மூழ்கு” என்று கூறியதாகவும், அதனால் அவனது மனத்திலிருந்த காம எண்ணங்கள் மறைந்துபோய்விட்டன என்றும் சொல்லப்படுகிறது.
1854 நவம்பர் 16–ஆம் தேதி கிழக்கு கல்கத்தாவில் பாராசாத் என்னும் இடத்தில் தாரக்நாத் கோஷால் பிறந்தான். அவனுடைய தந்தை ராம்கனாய் கோஷால் ஒரு பக்திமிக்க பிராமணர். அவர் காளிதேவியை வழிபட்டு வந்தார்; பல தந்திர சாதனைகளைப் பழகி வந்தார். அவருடைய மனைவி வாமசுந்தரி அன்பான, பக்தி மிக்கப் பெண்மணி ஆவார். ராம்கனாய் வக்கீல் தொழிலைச் சிறப்பாகச் செய்துவந்ததுடன் ஏழைகள்மீதும் துறவிகள்மீதும் இரக்கம் கொண்டிருந்தார். அவருடைய ஊரில் உள்ள பள்ளிக்குக் காரியதரிசியாக விளங்கிய அவர் சுமார் முப்பது ஏழைச் சிறுவர்களுக்கு தமது வீட்டில் தங்குவதற்கு இடம் அளித்திருந்தார்.
ராம்கனாய்க்கும் வாமசுந்தரிக்கும் முதலில் பிறந்தது பெண் குழந்தை; பெயர் சண்டி. தம்பதிகள் இருவரும் தாரகேஷ்வர சிவனிடம் பிரார்த்தனை செய்து, ஒரு வருடம் தவமிருந்து ஆண் பிள்ளை ஒன்றை வேண்டினார்கள். ஒருநாள் இரவு சிவபெருமான் வாமசுந்தரியின் கனவில் தோன்றி அவரிடம் “உன்னுடைய பக்தியால் மகிழ்ச்சியடைந்தேன். ஆன்மீகச் செல்வன் ஒருவனை நீ பெற்றெடுப்பாய் என்று நான் ஆசீர்வதிக்கிறேன்” என்று கூறினார்.
தாரகேஷ்வர சிவனின் வரத்தால் பிறந்த அந்தக் குழந்தைக்கு அவர்கள் தாரக்நாத் என்று பெயர் சூட்டினார்கள். ஜோசியர் ஒருவர் அந்தச் சிறுவனின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு அவன் துறவியாகவோ அல்லது ராஜாவாகவோ வாழ்வான் என்று கூறினார். தாரக்கிற்கு க்ஷீரோதா, நிரோதா என்ற இரண்டு தங்கைகள் இருந்தார்கள். நிரோதா பிறந்த மூன்று மாதத்தில் வாமசுந்தரி இறந்துவிட்டார். தாரக்கிற்கு அப்போது வயது ஒன்பது இருக்கும். அவனது தந்தை விரைவிலேயே மறுமணம் செய்துகொண்டார். அந்தச் சமயத்தில் தாரக்கின் அக்கா சண்டி இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்துவிட்டு இறந்துபோனாள். இதற்கு மத்தியில் மற்றொரு தங்கை க்ஷீரோதா கணவனை இழந்து விதவையாக வீடு திரும்பினாள். இல்லறத்திலுள்ள கஷ்டங்களைப் பார்த்து தாரக்கின் மனம் இயல்பாகவே துறவை நாடியது.
தாரக் பாராசாத் பள்ளியில் கல்வி கற்றான். அதற்குப் பிறகு அவன் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றான். அவன் சிறந்த மாணவனாக இருந்தாலும், ஏட்டுப் படிப்பில் விருப்பம் இல்லாதவனாக இருந்தான். ஆரம்பத்திலிருந்தே அக நாட்டம் கொண்டவனாக விளங்கிய அவன் பிரார்த்தனை, தியானம் ஆகியவற்றில் அதிக ஆர்வமுடையவனாக இருந்தான்.
பத்தாவது படித்துக்கொண்டிருக்கும்போது தந்தையின் வருமானம் குறைந்துவிட்டதைத் தாரக் அறிந்துகொண்டான். குடும்பத்தின் பொருளாதார நிலைமையை முன்னேற்ற அவன் பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு வேலை தேட ஆரம்பித்தான். சில வருடங்களுக்கு ரயில்வேயில் பணிபுரிந்தான். கொஞ்சகாலம் காஜியாபாத்தில் வேலை பார்த்த அவன் பிறகு வட இந்தியாவில் முகல்சராய் என்ற இடத்திற்கு மாற்றப்பட்டான்.
அந்தக் காலகட்டத்தில் தமது மனநிலை எப்படி இருந்தது என்பது பற்றி சுவாமி சிவானந்தர் பிற்காலத்தில் கூறினார்: “சிறுவனாக இருந்தபோதே எனக்குக் குடும்ப வாழ்க்கையில் விருப்பம் இல்லாமல் போய்விட்டது. ஆன்மீக வாழ்க்கைக்காக எனது மனம் ஏங்கித் தவித்தது. நான் ரயில்வேயில் வேலை செய்துகொண்டே இறைவனை முழுமனத்துடன் பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன்.”
தாரக் முகல்சராயில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது நீண்டநேரம் தியானம் செய்து பழகினான். அவன் பிற்காலத்தில் நினைவுகூர்ந்தான்: “சிவ பெருமானும் புத்தரும் தியானம் செய்கின்ற படங்களைப் பார்த்து அதுபோல் நானும் தியானம் செய்ய எண்ணுவேன். இரவில் பெரும்பாலும் நான் தூங்கியதில்லை. ‘சமாதியை அடைவது எப்படி?’ —இந்த ஓர் எண்ணம்தான் எனக்கு இருந்தது.” ஒருநாள் சமாதியைப்பற்றி பேசிக்கொண்டிருந்தபோது அவனது அறைத் தோழனான பிரசன்னா, சமாதி நிலையை அனுபவித்துள்ள மிகப் பெரிய ஞானி ஒருவர் தட்சிணேசுவரத்தில் வாழ்ந்து வருகிறார் என்றும் அவருடைய பெயர் ஸ்ரீராமகிருஷ்ணர் என்றும் கூறினான்.
இந்தக் காலகட்டத்தில்தான், நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி, தாரக் தனது விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்துகொள்ள நேர்ந்தது. அவன் இளம் மனைவியான நித்தியகாளியின் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டான். அதேவேளையில், இறைவனிடம் தனக்குள்ள தணியாத தாகத்தைப்பற்றியும் அவளிடம் தெரிவித்தான். ஆன்மீக வாழ்க்கையை மேற்கொள்ளச் சொல்லி, அவளுக்குப் பல அறிவுரைகளையும் வழங்கினான்.
நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தாரக் கல்கத்தாவிற்கு இடம் பெயர்ந்தான். அங்கே அவன் மேக்கினான்–மெக்கன்சி என்ற கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தான். கல்கத்தாவில் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கி அவன் வேலைக்குச் சென்று வந்தான். வார இறுதி நாட்களில் பாராசாத்தில் வசிக்கின்ற மனைவியைப் பார்க்கப் போய்வந்தான்.
அந்தச் சமயத்தில் கேசவசந்திர சேனின் தலைமையில் இயங்கிவந்த பிரம்மசமாஜம் கல்கத்தாவில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது. தாரக்கும் பிரம்மசமாஜத்தில் உறுப்பினன் ஆனான். அவனுள் தணியாமல் கொந்தளித்துக் கொண்டிருந்த இறைதாகத்தை மட்டும் எந்த வகையிலும் அந்த இயக்கத்தால் தணிக்க முடியவில்லை. இரவும் பகலும் அவன் சமாதியை வேண்டி அழுது இறைவனிடம் பிரார்த்தனை செய்தபடி காலத்தைக் கழித்துவந்தான்.
குருதேவருடன்
ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடரான ராமசந்திர தத்தரின் உறவினரில் ஒருவர் குருதேவரின் பக்தராவார். தாரக் வேலை பார்த்து வந்த அலுவலகத்திலேயே அவரும் வேலை பார்த்து வந்தார். அவர் குருதேவரைப் பற்றி பல விஷயங்களைத் தாரக்கிடம் கூறினார். அன்றிரவு குருதேவர் ராமின் வீட்டிற்கு வரப்போவதையும் தெரிவித்தார். இவ்வாறு 1880 மே / ஜூன் மாதத்தில் ஒரு சனிக்கிழமையன்று தாரக் கல்கத்தாவிலுள்ள ராமசந்திர தத்தரின் இல்லத்தில் குருதேவரைச் சந்தித்தார்.
தாரக் சென்றபோது குருதேவர் பரவசநிலையில் அமர்ந்திருந்தார். சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைக் கொஞ்சமும் அறியாத நிலையில் இருந்த குருதேவர், “நான் இப்போது எங்கு இருக்கிறேன்?” என்று கேட்டார். அதற்கு மற்றவர்கள், “ராமின் வீட்டில்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், “எந்த ராமின் வீட்டில்?” என்று கேட்டார். “டாக்டர் ராமின் வீட்டில் இப்போது நீங்கள் இருக்கிறீர்கள்” என்று அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். குருதேவர் உடனே, “ஆம், இப்போது புரிகிறது” என்று சொல்லிவிட்டுச் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.
தாரக் நீண்ட நாட்கள் கழித்து இந்த முதல் சந்திப்பைப் பற்றிக் கூறினார்: “அன்று மாலை நான் ராம்பாபுவின் வீட்டிற்குச் சென்றேன். குருதேவர் அறையில் பக்தர்கள் புடைசூழ அமர்ந்திருந்தார். அவர் அப்போது பரவசநிலையில் இருந்தார். நான் குருதேவரை வணங்கிவிட்டு அவருக்கு அருகில் அமர்ந்தேன். நான் எந்தச் சமாதியைப் பற்றி நாளெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தேனோ குருதேவர் அப்போது அதைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார். அவர் நிர்விகல்ப சமாதியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தது எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. சிலரால் மட்டுமே அதை அடையமுடியும் என்று அவர் கூறினார். நிர்விகல்ப சமாதியில் ஆழ்ந்திருக்கும் ஒருவருடைய உடல் இருபத்தியோரு நாட்களில் வீழ்ந்துவிடும் என்றார் அவர்.
தாரக்கிற்கு அப்போது குருதேவருடன் பேச வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு மாதம் கழித்து அவர் குருதேவரைப் பார்க்கச் சென்றார். ஒரு சனிக்கிழமை மாலையில் வேலையை முடித்துவிட்டு நண்பர் ஒருவரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு படகில் தட்சிணேசுவரம் புறப்பட்டார்.
எண்ணெய் விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் குருதேவர் தமது அறையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தார். அவருக்கு முன்னால் நான்கைந்துபேர் தரையில் அமர்ந்திருந்தனர். ஸ்ரீராமகிருஷ்ணர் தாரக்கைப் பார்த்து, “என்னை இதற்கு முன்பு பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டார். தாரக் அவரை சமீபத்தில் ராமின் வீட்டில் வைத்துப் பார்த்ததாகக் கூறினார். தாரக் குருதேவரின் மடியில் தலையை வைத்து வணங்கினார். குருதேவர் அவரது தலையை அன்புடன் வருடிக்கொடுத்தார்.
தாரக் நினைவுகூர்கிறார்: “குருதேவரின்மீது எனக்கு இனம் புரியாத அன்பு ஏற்பட்டது. அவர் எனக்கு மிகவும் அறிமுகமானவர் போல் தோன்றியது. இனம் புரியாத மகிழ்ச்சி அலை என் இதயத்தில் புரண்டடித்தது. அவருக்குள் நான் அன்பான, மென்மையான, என்னை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்ற தாயைக் கண்டேன். எனவே நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும், சிறு குழந்தைக்கே உரிய எதிர்பார்ப்புடனும் அவரிடம் சரணடைந்தேன். என்னை முழுவதும் அவர் வசம் ஒப்படைத்துவிட்டேன். என் வாழ்நாள் முழுவதும் யாரைத் தேடிக் கொண்டிருந்தேனோ அவரிடம் நான் வந்து சேர்ந்துவிட்டதை அறிந்துகொண்டேன். அன்றுமுதல் நான் குருதேவரை என்னைப் பெற்ற தாயாகவே எண்ணத் தொடங்கினேன்.”
கோயில்களிலிருந்து மாலை ஆரதிக்கான மணிகளும் முரசுகளும் ஒலிக்கத் தொடங்கின. குருதேவர் தெய்வீகப் பரவசத்தில் ஆழ்ந்திருந்தார். சிறிதுநேரம் கழித்து அவர் தாரக்கிடம், “உனக்கு உருவக் கடவுளைப் பிடிக்குமா? அல்லது அருவக் கடவுளைப் பிடிக்குமா?” என்று கேட்டார். தாரக் அதற்கு, “எனக்கு அருவக் கடவுளைப் பிடிக்கும்” என்று பதில் சொன்னார். “ஆனால் பல்வேறு உருவங்களாக வெளிப்படும் தெய்வீக சக்தியையும் நீ ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்” என்றார் குருதேவர். பிறகு அவர் தாரக்கை அழைத்துக்கொண்டு காளி கோயிலுக்குச் சென்றார். குருதேவர் காளி தேவியின் திருமுன்பு வீழ்ந்து வணங்கினார். தாரக் பிரம்மசமாஜத்தில் உறுப்பினராக இருந்ததால் ஏனோ காளிதேவியின் சிலை முன்பு விழுந்து வணங்கத் தயங்கினார். (பிரம்மசமாஜம் சிலை வழிபாட்டை ஏற்றுக்கொள்வதில்லை.) திடீரென்று தாரக்கின் மனத்தில் ஒரு சிந்தனை தோன்றியது. அவர் நினைத்தார்: “நான் ஏன் இப்படிப்பட்ட வேறுபாடுகளைக் கொண்டிருக்க வேண்டும்? கடவுள் எல்லா இடங்களில் நிறைந்தவர் என்றால் ஏன் அவர் இந்தக் கல்லிலும் இருக்கமாட்டார்?” இந்த எண்ணம் வந்த உடனே அவர் வீழ்ந்து வணங்கினார்.
கோயிலில் இருந்து வந்த பிறகு குருதேவர் தாரக்கிடம் அன்றிரவைத் தம்முடனே கழிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் தாரக் ஏற்கனவே தட்சிணேசுரத்தில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் அன்று தங்குவதாக வாக்களித்திருப்பதை குருதேவரிடம் எடுத்துச் சொன்னார். இதைக் கேட்ட குருதேவர் மனம் மகிழ்ந்து, “ஆம், சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும். கலியுகத்தில் சத்தியத்தைக் கடைப்பிடிப்பதே மிகப் பெரிய தவம்” என்றார். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த அவர் தாரக்கிடம், “அப்படியென்றால் சரி, நாளை இங்கே வா” என்று கூறி அனுப்பிவைத்தார்.
மறுநாள் மத்தியானம் தாரக் அங்கே சென்றபோது குருதேவர் அவரை அன்புடன் வரவேற்றார்; ஆன்மீக வாழ்க்கையைப்பற்றிப் பேசினார். கோயிலிலிருந்து வந்த பிரசாத உணவை அவருக்கு இரவில் உண்ணக்கொடுத்த குருதேவர் தெற்கு வராந்தாவில் அவர் படுத்துக்கொள்ள படுக்கை ஒன்றையும் விரித்து வைத்தார். அன்றிரவு வேறு யாரும் அங்கே தங்கியிருக்கவில்லை. தாரக் நினைவுகூர்கிறார்:
“சந்தோஷத்தால் அன்றிரவு எனக்கு உறக்கம் வரவில்லை. நடுஇரவில் நான் எழுந்து பார்த்தபோது குருதேவர் தமது அறையில் ஆடை எதுவுமின்றி ஆனந்த நடனமாடிக்கொண்டிருந்தார். அவர் ஏதோ தமக்குத்தாமே முணுமுணுத்துக்கொண்டிருந்தார். சிறிதுநேரம் கழித்து அவர் வராந்தாவிற்கு வந்து என்னிடம், ‘என்ன, தூங்குகிறாயா?’ என்று கேட்டார். நான் அதற்கு, ‘இல்லை’ என்று பதில் சொன்னேன். அவர் என்னிடம், ‘எனக்காக ஸ்ரீராமரின் திருநாமத்தைச் சிறிதுநேரம் உச்சரிப்பாயா?’ என்று கேட்டார். நான் குருதேவர் சொன்னதுபோல் ஸ்ரீராமரின் திருப்பெயரை சிறிதுநேரம் உச்சரித்தேன். கொஞ்சநேரத்தில் அவர் அமைதி அடைந்தார். இந்த வகையில் நான் அந்த இரவை மகிழ்ச்சியுடன் கழித்தேன். காலையில் நான் வணங்கி விடைபெறும்போது அவர் என்னிடம், ‘தனியாக மீண்டும் ஒருமுறை இங்கே வா’ என்று கூறி வழியனுப்பி வைத்தார்.
“நான் அடுத்த முறை தட்சிணேசுவரத்திற்குச் சென்றபோது பரவசநிலையில் இருந்த குருதேவர் எதிர்பாராத விதமாக எனது நெஞ்சைத் தொட்டார். நான் உடனே புறஉலக நினைவை இழந்து தியானத்தில் மூழ்கினேன். எவ்வளவு நேரம் அந்த நிலையிலேயே நீடித்திருந்தேன் என்பது எனக்குத் தெரியாது. அதன் விளைவாகப் பல உண்மைகள் எனக்கு விளக்கப்பட்டன. நான் ஆன்மா என்பதையும், எப்போதும் உள்ளவன் என்பதையும், பந்தம் எதுவும் இல்லாதவன் என்பதையும் அன்று நான் உணர்ந்துகொண்டேன். குருதேவரின் உருவில் கடவுள்தான் மக்களின் நன்மைக்காக அவதரித்திருக்கிறார் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டேன். அவருக்குச் சேவை செய்யவே நான் இந்தப் பூமியில் பிறந்துள்ளதையும் புரிந்துகொண்டேன். அவர் மற்றொரு நாளும் பஞ்சவடியிலுள்ள ஆலமரத்தடியில் என்னை அதுபோல் ஆசீர்வதித்தார்.”
ஸ்ரீராமகிருஷ்ணர் தாரக்கைத் தம்முடைய அந்தரங்கச் சீடர்களுள் ஒருவராக ஏற்றுக்கொண்டார். தாரக் பிற்காலத்தில் நினைவுகூர்கிறார்:
“ஒருநாள் ஸ்ரீராமகிருஷ்ணர் என்னிடம், ‘நல்லது, பலர் இங்கே வருகிறார்கள். நான் அவர்களுடைய வீட்டைப் பற்றியோ, அவர்கள் யார், என்ன என்பதைப் பற்றியோ விசாரிப்பதில்லை. ஆனால் முதலில் பார்த்தபோதே நீ என்னைச் சேர்ந்தவன் என்பதை உணர்ந்துகொண்டேன். எனவே உன்னைப் பற்றியும், உனது குடும்பத்தைப் பற்றியும், பெற்றோர்களைப் பற்றியும் அறிந்துகொள்ள எண்ணுகிறேன். உன்னைப்பற்றிய விவரங்களைச் சொல்’ என்றார். நான் அதற்கு என் வீடு பாராசாத்தில் உள்ளதென்றும் என் தந்தையின் பெயர் ராம்கனாய் கோஷால் என்றும் கூறினேன்.
“இதைக் கேட்டவுடன் குருதேவர், ‘ஓ, அப்படியா! நீ ராம்கனாய் கோஷாலின் மகனா! உன் தந்தையை எனக்கு நன்றாகத் தெரியும். ராணி ராசமணியின் தோட்டத்தை அவர்தான் பார்த்துக்கொண்டிருந்தார். ராணியும் அவருடைய குடும்பத்தாரும் உன் தந்தையிடம் நல்ல மரியாதை கொண்டிருந்தார்கள். அவர் உண்மையிலேயே சிறந்த ஆன்மீக சாதகர். எனக்குச் சாதனை நாட்களில் ஒருமுறை உடல் முழுவதும் தாங்க முடியாத எரிச்சல் ஏற்பட்டிருந்தது. அப்போது உன் தந்தை என்னிடம் இஷ்டதெய்வத்தின் திருநாமம் எழுதிய தாயத்தை அணிந்துகொள்ளும்படி கூறினார். என்ன ஆச்சரியம் பாரேன்! அவர் கூறியதுபோல் செய்தபோது என் உடல் எரிச்சல் நின்று போய்விட்டது. உனது தந்தையை ஒருமுறை என்னை வந்து பார்க்கச் சொல்கிறாயா?’ என்ற கேட்டார்.
“அந்தக் காலகட்டத்தில் நான் கல்கத்தாவில் வசித்து வந்தேன். எப்போதாவது வீட்டிற்குப் போய் வருவேன். என் தந்தையிடம் ஸ்ரீராமகிருஷ்ணரைப்பற்றிச் சொன்னபோது அவர் மிகவும் மகிழ்ந்தார். ஒருநாள் தட்சிணேசுவரம் வந்து குருதேவரைச் சந்திக்கவும் செய்தார்.”
ஒருசமயம் தாரக் குருதேவரிடம் தனக்கு சமாதிநிலையை அருளுமாறு வேண்டிக்கொண்டார். குருதேவர் அவரிடம், “உனக்கு அந்த நிலை வாய்க்கும். பொறுமையாக இரு. உரிய காலத்தில் காளி தேவி அந்த நிலையை உனக்கு அளித்து ஆசீர்வதிப்பாள்” என்று கூறினார்.
தாரக் குருதேவருடன் வாழ்ந்த காலத்தில் தமக்கு ஏற்பட்ட அற்புதமான அனுபவத்தை நினைவுகூர்கிறார்:
“அந்த நாட்களில் எனக்குள் அவ்வப்போது அடக்கமுடியாமல் அழுகை பீறிட்டுக் கிளம்பும். ஒருநாள் இரவில் நான் கங்கைக் கரையோரத்தில் இருந்த வகுள மரத்தடியில் நின்றுகொண்டு அடக்கமுடியாமல் அழுதுகொண்டிருந்தேன். பிறகு குருதேவரிடம் சென்றபோது அவர் என்னிடம், ‘தனக்காக அழுபவர்களிடம் கடவுள் கருணை கொள்கிறார். எத்தனையோ பிறவிகளாகப் படிந்துள்ள மன அழுக்குகள் பக்திக் கண்ணீரால் அழிந்துவிடுகின்றன’ என்று கூறினார்.
“மற்றொருநாள் பஞ்சவடியில் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டிருந்தேன். குருதேவர் என் அருகில் வந்து வெறுமனே என்னைப் பார்த்தார். அவ்வளவுதான், நான் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினேன். அவர் அசையாமல் நின்றுகொண்டிருந்தார். என் நெஞ்சினுள் ஏதோ மேல் நோக்கி ஊர்ந்து வருவது போலத் தோன்றியது. என் உடல் பலமாக ஒருமுறை நடுங்கியது. எனது அழுகை வெறும் அழுகை அல்ல என்றும் அது ஒருவிதமான பரவசநிலை என்றும் குருதேவர் கூறினார். பிறகு நான் அவரைத் தொடர்ந்து அறைக்குச் சென்றேன். அங்கே குருதேவர் எனக்கு உணவு பரிமாறினார். குண்டலினி சக்தியை எழுப்பிவிடுவது அவருக்கு மிகவும் சாதாரணமான விஷயம். அவர் யாரையும் தொடமாலேயே வெறும் ஒரு பார்வையால் அந்தச் சக்தியை எழுப்பிவிடுவார்.”
தட்சிணேசுவரத்திலும் காசிப்பூரிலும் தாரக் குருதேவருடன் தங்கி வாழ்ந்ததுடன் அவருக்குச் சேவையும் செய்து வந்தார். மற்ற சீடர்களைப் போலவே தாரக்கும் குருதேவருடனான தனது நினைவுகளைப் பிற்காலத்தில் நினைவுகூர்ந்தார். அந்த அனுபவங்கள் அனைத்தும் அவதார புருஷரான குருதேவரின் வாழ்க்கையை விளக்க வல்லவை. எனவே அவற்றை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
“குருதேவரின் கைகள் மிகவும் மென்மையானவை. கைகள் மட்டுமல்ல, உடல் முழுவதுமே அப்படித்தான். லூச்சி ஒன்று அவரது கைகளை அறுத்துவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
“இரவில் அவர் ஒன்றோ இரண்டோ லூச்சிகளை ரவைப் பாயசத்துடன் சாப்பிடுவார். பால் அவருக்கு ஜீரணமாகாது. அதனால் அன்னை ஸ்ரீசாரதாதேவி அந்த பாலில் கொஞ்சம் தண்ணீர் கலந்து ரவைப் பாயசம் செய்து தருவார். அலமாரியில் எப்போதும் சானா (பாலாடை) இனிப்பு வகைகள் இருக்கும். பசிக்கும்போது ஒன்றோ இரண்டோ அவர் உண்பார்.
“அந்த நாட்களில் குருதேவரின் அறையில் நாங்கள் தரையில் படுத்துக்கொள்வோம். எப்படிப் படுக்க வேண்டும் என்பதையும் குருதேவர் சொல்லித் தருவார். மல்லாந்து படுத்தவாறு இதயத்தில் தேவியை நினைத்துக்கொண்டே உறங்கினால் ஆன்மீகக் கனவுகள் வரும்; தெய்வச் சிந்தனையுடன் தூங்க வேண்டும் என்பார் அவர். வெயில் காலத்தில் நாங்கள் வராந்தாவில் படுத்திருப்போம். அங்கே கொசுக்கடி அதிகம்.
“ஒருநாள் இரவு ஒருமணிக்கு குருதேவர் வராந்தாவிற்கு வந்து, உறங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி, ‘எனக்காக கோபாலனின் திருநாமத்தை உச்சரிப்பாயா?’ என்று கேட்டார். நான் சுமார் ஒருமணிநேரம் கோபாலனின் திருநாமத்தை ஓதினேன். வேறு யாரும் இல்லாவிட்டால் இரவுக் காவலாளியை அழைத்து நாம ஜபம் செய்யச் சொல்வார். இறைநாமத்தின்மீது குருதேவருக்குத்தான் எத்தனைப் பிரியம்!
“குருதேவர் கொஞ்ச நேரம்தான் உறங்குவார். தொடர்ச்சியாக அவர் ஒருமணி நேரமோ, அரைமணி நேரமோதான் உறங்குவார். பெரும்பாலும் அவர் சமாதியிலேயே ஆழ்ந்திருப்பார். மற்ற நேரங்களில் பல்வேறு ஆன்மீக பாவனைகளில் திளைத்திருப்பார். இந்த பாவனைகள் இரவு நேரங்களில் இன்னும் அதிகமாக வெளிப்படும். இரவு முழுவதும் அவர் தேவியின் திருப்பெயரையோ, ஹரியின் நாமத்தையோ உச்சரிப்பார். அவருக்குத் தூக்கம் என்பதே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நாங்கள் எழுந்து பார்த்தபோதெல்லாம் அவர் பரவசத்தில் தேவியிடம் உரையாடிக் கொண்டிருப்பார்; ஏதாவது முணுமுணுத்தபடி அறையில் குறுக்கும்நெடுக்குமாக நடந்து கொண்டிருப்பார். நடுஇரவில் அவர் எங்களை எழுப்பி, ‘என்ன பையன்களா! தூங்குவதற்கா இங்கே வந்தீர்கள்? இரவு முழுவதும் தூங்கினால் எப்போது கடவுளை அழைப்பீர்கள்?’ என்று கேட்பார். அவருடைய குரலைக் கேட்ட உடனே நாங்கள் எழுந்து உட்கார்ந்து தியானம் செய்யத் தொடங்குவோம்.
“தமக்குச் சேவை செய்ய என்னை அவ்வளவு எளிதாக குருதேவர் அனுமதிக்க மாட்டார். இதனால் நான் மிகவும் மனம் வருந்தினேன். ஆனால் அவர் என்னை ஏன் அனுமதிக்கவில்லை என்பதை ஒருநாள் அறிந்துகொண்டேன். அன்று நான் தட்சிணேசுவரத்தில்தான் தங்கியிருந்தேன். வேறு சில பக்தர்களும் இருந்தார்கள். நீண்டநேரம் குருதேவர் பேசிவிட்டு இயற்கைக்கடனைக் கழிக்க சவுக்குத் தோப்பிற்குச் சென்றார். அவரால் உலோகம் எதையும் தொட முடியாது என்பதால் எப்போதும் யாராவது பக்தர் ஒருவர் தண்ணீர் செம்பை எடுத்துக்கொண்டு அவரைப் பின் தொடர்வது வழக்கம். அன்று அவர் சவுக்குத் தோப்பிற்குச் சென்றபோது நான் செம்பை எடுத்துச் சென்றேன். அவர் திரும்பி வரும்வரை நான் ஓர் இடத்தில் காத்துக்கொண்டிருந்தேன். திரும்பி வந்த குருதேவர் என்னைப் பார்த்ததும், “நீ ஏன் செம்பை எடுத்து வந்தாய்? உன்னிடமிருந்து எப்படி நான் தண்ணீரை வாங்கிக்கொள்வேன்? உனது தந்தையை நான் குருவாக மதிப்பதால் உன்னிடமிருந்து சேவை எதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று சொன்னார். அவர் பேசியதைக் கேட்டு நான் ஆச்சரியமடைந்தேன். குருதேவர் ஏன் எனது சேவையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அப்போதுதான் புரிந்துகொண்டேன். குருதேவரைப் புரிந்துகொள்வது கடினம். அவர் எதை நமக்குப் புரியவைக்கிறாரோ அதை மட்டுமே நாம் அறிந்துகொள்ள முடியும்.
“குருதேவருடைய பேச்சு பிடித்துப் போனதால் அவற்றைக் குறிப்பெடுக்க விரும்பினேன். ஒருநாள் நான் அவர் பேசுவதையே உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தேன். குருதேவர் திடீரென்று என்னைப் பார்த்து, “இங்கே பார், ஏன் இவற்றையெல்லாம் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறாய்? நீ அதைச் செய்ய வேண்டியதில்லை. உன் பாதை வேறு” என்று சொன்னார். என் நோக்கத்தை அவர் அறிந்துகொண்டது கண்டு நான் திகைத்துப் போனேன். அவ்வளவுதான், நான் எழுதி வைத்திருந்த குறிப்புகளையும் கங்கையில் வீசி எறிந்துவிட்டேன்.”
1883-ஆம் ஆண்டின் நடுவில் தாரக்கின் மனைவி நித்தியகாளி உடல்நிலை சரியில்லாமல் இறந்துபோனாள். தாரக் மனைவிக்கான இறுதிச் சடங்குகளைச் செய்தார். பிறகு வேலையை ராஜினமா செய்துவிட்டு, உலகைத் துறந்து துறவியாக முடிவு செய்தார். அதைத் தந்தையிடம் கூறியபோது அவர் அழுதுவிட்டார். குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளச் சொல்லி அறிவுறுத்திய அவர் மகனுடைய தலையில் கை வைத்து, “நீ இந்தப் பிறவியிலேயே கடவுளை அறிவாய்! நானே உலகத்தைத் துறந்துவிட்டு கடவுளை அடைய விரும்பினேன். ஆனால் ஏனோ அது முடியாமல் போனது. நான் உன்னை மனப்பூர்வமாக ஆசீர்வதிக்கிறேன், நீ இறையனுபூதி பெறுவாய்!” என்று ஆசீர்வதித்தார். இதைத் தாரக் குருதேவரிடம் கூறியபோது அவர் மிகவும் மனம் மகிழ்ந்து, “இப்படி நடந்தது நல்லதற்குத்தான்!” என்று கூறினார்.
இளம் சீடர்களில் தாரக்தான் முதலில் உலக பந்தங்களைத் துறந்தவர். கடைசி மூன்று ஆண்டுகள் அவர் குருதேவருக்கு அருகிலேயே இருந்து சேவை செய்து வந்தார். அவர் மத்திய கல்கத்தாவிலுள்ள பீடன் சதுக்கம், ஹேதுவா போன்ற பூங்காக்களிலும், தெற்கு கல்கத்தாவில் அமைந்துள்ள கியோரதலா மயானத்திலும் நாள் முழுக்க தியானம் பழகினார். சில சமயங்களில் கிழக்கு கல்கத்தாவில் ராமிற்குச் சொந்தமான காங்குர்காச்சி யோகோத்யான் இல்லத்திலும் சாதனைகள் செய்துவந்தார்.
1884 பிப்ரவரி மாதம் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு ஏற்பட்ட விபத்தில் அவரது இடது கையில் சிறிய அளவில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தாரக் குருதேவரிடம் விசாரித்தபோது அவர் சிரித்துக்கொண்டே கூறினார்: “ஒருநாள் இரவில் நான் தோட்டத்தில் நடந்துகொண்டே நிலவைப் பார்க்க முயற்சி செய்தேன். அப்போது வேலியில் எனது கால்கள் மாட்டிக்கொண்டன. அதனால் தடுமாறி கீழே விழுந்து இடது கை மணிக்கட்டு எலும்பை முறித்துக்கொண்டேன். வலி இன்னும் போகவில்லை. கையைச் சுற்றிலும் இறுக்கிக் கட்டுப்போட்டு உள்ளனர். அதை அவிழ்த்துவிட மறுக்கிறார்கள். என்னால் தேவியை முழுமனத்துடன் அழைக்க முடியவில்லை. அவள் ஏன் என்னை இப்படி சிக்கலில் மாட்டி வைத்துவிட்டாள்? இதெல்லாம் என்ன முட்டாள்தனம் என்று சில நேரங்களில் நினைக்கிறேன். எல்லா பந்தங்களையும் உதறிவிட்டு அம்பிகையிடம் போய்விட நினைக்கிறேன். ‘சரி, தேவியின் விளையாட்டு தொடரட்டும். இதுவும் வேடிக்கையாகத்தான் இருக்கிறது’ என்று நினைத்துப் பேசாமல் இருக்கிறேன்.”
அதற்கு தாரக் குருதேவரிடம், “ஐயா, நீங்கள் நினைத்தால் உங்களைக் குணமாக்கிக் கொள்ள முடியும்” என்றார். “என்ன! நான் நினைத்தால் என்னை குணமாக்கிக்கொள்ள முடியுமா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் குருதேவர். பிறகு சிறிதுநேரம் அமைதியாக ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்துவிட்டு தொடர்ந்தார்: “இல்லை, வலியும், நோயின் துன்பமும் தேவை. உலக ஆசைகளுடனும், பல நோக்கங்களுடனும் இங்கே வருபவர்கள் எனக்கு ஏற்பட்டிருக்கும் நோயைப் பார்த்து, என்னை விட்டு விலகிச் சென்றுவிடுவார்கள்” என்று கூறினார். அடுத்த விநாடியே தேவியிடம், “அம்மா, நீ சரியான திட்டம் ஒன்றைத் தீட்டியுள்ளாய்” என்றார். பிறகு பாடல் ஒன்றைப் பாடியபடியே சமாதியில் மூழ்கிவிட்டார். சிறிதுநேரம் கழித்துப் புறஉலக நினைவைத் திரும்பப் பெற்ற அவர் ஒரு குழந்தையைப்போல் தேவியிடம், “அம்மா, நீ பிறக்கவே இல்லை. எனவே வாழ்க்கையில் உள்ள வலியை நீ எப்படி உணர்வாய்?” என்று கூறினார்.
1884–ஆம் ஆண்டு தாரக் பிருந்தாவனத்திற்குத் தீர்த்த யாத்திரை போய்வந்தார். அந்தப் புண்ணியத்தலத்திலிருந்து கொண்டு வந்திருந்த புனித மண்ணையும், கோயில் பிரசாதத்தையும் எடுத்துக்கொண்டு போய் குருதேவரைத் தரிசித்தார்.
1885–ஆம் ஆண்டின் நடுவில் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டது. தட்சிணேசுவரத்தில் தங்கியிருந்த குருதேவரைக் கல்கத்தா மருத்துவர் ஒருவர் வந்து பரிசோதனை செய்தார். குருதேவர் பக்தர்களிடம், “நல்லது, நான் மகான் என்றால் எனக்கு ஏன் நோய் வரவேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள்” என்றார். தாரக் அதற்கு, “பகவான் தாஸ் பாபாஜிகூட நோய் வந்து நீண்ட நாட்கள் படுக்கையில் கஷ்டப்பட்டார்” என்று பதிலளித்தார். குருதேவர் அதை மறுத்து, “ஆனால் டாக்டர் மதுவைப் பார். அறுபது வயதிலும் மனைவிக்கு உணவு சுமந்து செல்கிறார். அவருக்கு எந்த நோயும் வரவில்லையே” என்றார். உடனே ஒரு பக்தர், “ஐயா, உங்களுக்கு வந்துள்ள நோய் பிறருடைய நலனுக்காகத்தான். பிறருடைய பாவங்களை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள். அதனால்தான் உங்களுக்கு இந்த நோய் வந்துள்ளது” என்று கூறினார். யாரோ ஒரு பக்தர் குருதேவரிடம் இந்த நோய் குணமாகுமாறு தேவியிடம் பிரார்த்திக்குமாறு சொன்னபோது குருதேவர் அதை மறுத்தவராய், “அதெல்லாம் என்னால் கேட்க முடியாது” என்று கூறிவிட்டார்.
1885 செப்டம்பர் 26–ஆம் தேதி ஸ்ரீராமகிருஷ்ணர் மருத்துவச் சிகிச்சைக்காக கல்கத்தாவில் முதலில் சியாம்புகூரிலும் பிறகு காசிப்பூர்த் தோட்ட வீட்டிலும் தங்கினார். தாரக் மற்ற சீடர்களுடன் அந்த வீட்டில் தங்கியிருந்து குருதேவருக்குச் சேவை செய்தார். அந்த நாட்களைப் பற்றி அவர் கூறினார்:
“ஒருவர் மாற்றி ஒருவர் பகலென்றும் இரவென்றும் பாராமல் அவருக்குச் சேவை செய்தோம். சமையல்காரர் ஒருவர் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தார். ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் நாங்கள்தான் சமையல் வேலையையும் பார்த்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் சோறு அல்லது சப்பாத்தி, பருப்பு, காய்கறி— இவைதான் எங்கள் உணவு. மனநிலை மிகவும் உயர்ந்து இருந்ததால், எந்த நேரமும் ஆன்மீக சாதனைகள் புரிந்துகொண்டிருந்தோம். உணவைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படவில்லை.
“ஒருநாள் இரவு சமைக்கும் பொறுப்பு என்னிடம் வந்தது. நான் கூட்டு செய்து, கடைசியாக அதில் மசாலாவைச் சேர்த்தபோது கமகமவென்று மணம் அப்படியே காற்றில் பரவியது. மாடியில் இருந்த குருதேவர் அதனை முகர்ந்துவிட்டு அருகில் இருந்த ஒருவரிடம், ‘என்ன சமையல் நடக்கிறது? அற்புதம்! மசாலாவின் மணம் எல்லா இடங்களிலும் பரவிவிட்டதே! யார் சமைப்பது?’ என்று கேட்டார். உதவியாளர் எனது பெயரைச் சொல்லவே குருதேவர் அவரிடம், ‘நான் அந்தக் கூட்டைக் கொஞ்சம் ருசிக்க விரும்புகிறேன்’ என்று கூறினார். அதனை ஆவலுடன் சாப்பிட்டார். ஆச்சரியம் என்னவென்றால், தொண்டைப் புற்றுநோய் இருந்ததால் காரமான பொருட்கள் எதையும் அவரால் விழுங்க முடியாது. ரவைப் பாயசத்தையே அவர் மிகுந்த சிரமப்பட்டுத்தான் உட்கொள்வார். ஆனால் பல நேரங்களில் அவரால் அதைக்கூடச் சாப்பிட முடியாது.”
1886–ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நரேந்திரரும் தாரக்கும் இன்னும் சில சீடர்களும் புத்தரின் போதனைகளையும், அவருடைய ஒப்பற்ற வாழ்க்கை வரலாற்றையும் படித்தார்கள். புத்தருடைய துறவு மனம், மன்னிக்கும் குணம், அன்பு, கருணை ஆகிய தெய்வீகக் குணங்கள் அவர்களை முழுவதும் ஆட்கொண்டன. ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் இரவில் யாரிடமும் சொல்லாமல் நரேந்திரர், தாரக், காளி ஆகிய மூவரும் புத்தகயாவிற்குப் புறப்பட்டுவிட்டார்கள்.
அவர்கள் புத்தகயாவிற்குச் சென்று சிலநாட்கள் புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தடியில் தியானம் பழகினார்கள். மூன்றாவது நாள் இரவில் நரேந்திரர் புத்தரை எண்ணி மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்: அருகில் தியானம் செய்துகொண்டிருந்த தாரக்கை நெகிழ்ச்சியுடன் கட்டியணைத்தபடியே கண்ணீர் விட்டுக் கதறத் தொடங்கினார்.
யாரிடமும் சொல்லாமல் அவர்கள் கயாவிற்குச் சென்றுவிட்டதால் காசிப்பூர்த் தோட்ட வீட்டில் அனைவரும் மிகுந்த கவலையுடன் இருந்தனர். ஆனால் குருதேவர் எதுவும் சொல்லவில்லை. மூவரும் திரும்பி காசிப்பூர் வந்து சேர்ந்தவுடன் குருதேவர், “நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சுற்றி அலையுங்கள். ஆனால் உங்களுக்கு ஆன்மீகம் வேறு எங்கும் கிடைக்கப்போவதில்லை. இந்த முறை எல்லாம் (தம்மைச் சுட்டிக்காட்டி) இங்கேதான் உள்ளன. நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சுற்றி வாருங்கள். வேறெங்கும் நீங்கள் (ஆன்மீகத்தைக்) காண முடியாது. இங்கே கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன” என்றார்.
தவ வாழ்க்கையும் தீர்த்த யாத்திரையும்
1886 ஆகஸ்ட் 16–ஆம் தேதி குருதேவர் இளம் சீடர்களையெல்லாம் பரிதவிக்க விட்டுவிட்டு மகாசமாதி அடைந்தார். அவர் சீடர்கள் அனைவரையும் அன்பால் பிணைத்திருந்தார். “சகோதரச் சீடர்கள் அனைவரும் மற்றவருக்காக உயிரையே தியாகம் செய்யும் அளவிற்கு ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு கொண்டிருந்தோம்” என்று சுவாமி சிவானந்தர் பிற்காலத்தில் நினைவுகூர்ந்தார். சகோதரச் சீடர்கள் முறைப்படி துறவு வாழ்க்கையை ஏற்றபோது தாரக், சுவாமி சிவானந்தர் ஆனார்.
வராக நகரில் மடம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே சகோதரச் சீடர்கள் அனைவரும் தவம், ஜபம், தியானம், பஜனை, சாஸ்திரப் படிப்பு ஆகியவற்றின் மூலமாக உறுதியான ஆன்மீகச் சூழல் ஒன்றை அங்கே ஏற்படுத்திவிட்டனர். சுவாமி சிவானந்தர் இரண்டரை வருடகாலம் மடத்திலேயே தங்கியிருந்து தமது ஆன்மீக வாழ்க்கையை உயர்த்திக்கொண்டதுடன், புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மடத்தை பலப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டார். உடல்நிலை சரியில்லாத துறவிகளுக்கு அவர் சேவை செய்தார். மடத்தில் அன்றாடப் பணிகளான காய்கறி நறுக்குதல், சமையல், கங்கையிலிருந்து நீர் எடுத்து வருதல், அறைகளைச் சுத்தம் செய்தல், கழிப்பறைகளைச் சுத்தம் செய்தல் ஆகிய பணிகளை அவர் மகிழ்ச்சியாக மேற்கொண்டார்.
1889–ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சுவாமி சிவானந்தர் கொஞ்சகாலம் சுற்றியலையும் துறவியாக வாழ ஆசைப்பட்டார். அவர் மடத்திலிருந்து கிளம்பி இமாலயத்திலுள்ள இரண்டு புகழ் வாய்ந்த புண்ணியத் தலங்களான கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களுக்குப் பயணம் புறப்பட்டார். அந்தக் காலத்தில் அது ஒரு கடினமான பயணம். ஏனெனில் பிரயாணிகள் நூற்றுக்கணக்கான மைல்கள் சிரமமான பாதை வழியே நடந்துசென்றுதான் அந்த இடத்தை அடைய வேண்டும். பிரயாணத்தின்போது சுவாமிகள் வடஇந்தியாவில் அமைந்துள்ள பல்வேறு புண்ணியத் தலங்களைத் தரிசித்தார். அவர் 23,000 அடி உயரத்தில் இருந்த கேதார் பனிமலை உச்சியைக் கண்டதும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். கடல் மட்டத்திலிருந்து கேதார் நாத் கோயில் 12,000 அடி உயரத்தில் அமைந்திருந்தது. அங்கே சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு அவர் பத்ரிநாத் என்ற இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.
சுவாமி சிவானந்தர் சுவாமி பிரம்மானந்தருக்கு ஒரு கடிதம் எழுதினார்: “நான் பத்ரிநாத் வந்து சேர்ந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. இந்த இடம் மிகவும் அழகாக உள்ளது. அளகானந்தா நதியின் கரையில் அமைந்துள்ள இந்த இடம் பனிச் சிகரங்களால் சூழப்பட்டுள்ளது. பனியை ஊடுருவிக்கொண்டு அளகானந்தா நதி பாய்ந்தோடுகிறது. சில இடங்களில் அதிகமாகப் பனி சூழ்ந்துள்ளதால் நதியில் ஓடும் நீர் நம் கண்களுக்குத் தெரிவதில்லை. பத்ரிநாத் வந்து சேரும்வரை நான் சில இடங்களில் சுமார் ஒரு மைல் தூரம் வரை பனியில் நடந்துசெல்ல வேண்டியிருந்தது. இருந்தாலும் இந்த இடம் கேதார்நாத்தைப்போல் அவ்வளவு குளிர்ச்சியாக இல்லை.” சுவாமி சிவானந்தர் அங்கே சிலநாட்கள் தங்கியிருந்து மகாவிஷ்ணுவிற்கு நடைபெற்ற பூஜைகளைக் கண்டு மகிழ்ந்தார்.
பத்ரிநாத்திலிருந்து கிளம்பிய சுவாமிகள் அல்மோரா சென்று சேர்ந்தார். ஸ்ரீநகருக்குச் செல்லும் வழியில் அவர் சுவாமி அகண்டானந்தரைச் சந்தித்தார். அப்போது சுவாமி அகண்டானந்தர் தமது திபெத் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்ப வந்துகொண்டிருந்தார். நீண்ட நாட்கள் கழித்து சந்தித்த சகோதரச் சீடர்கள் இருவரும் மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வடித்துக்கொண்டே ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக்கொண்டனர். சுவாமி சிவானந்தர் சுவாமி அகண்டானந்தரை வராக நகர மடத்திற்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் சுவாமி அகண்டானந்தர் அதை மறுத்துவிட்டு மீண்டும் திபெத் கிளம்பிச் சென்றார்.
அல்மோராவில் சுவாமிகள் தங்கியிருந்தபோது சில ஆன்மீக சாதகர்களைக் கண்டு பேசினார். உள்ளூர் பணக்காரரான லாலா பத்ரிஷா துல்கோரியா என்பவர் சுவாமிகளால் கவரப்பட்டு அவரைத் தம்முடைய வீட்டிற்கு விருந்தாளியாக வந்து தங்குமாறு அழைப்புவிடுத்தார். சுவாமி சிவானந்தருக்கு நல்லமுறையில் சேவையாற்றிய அந்தப் பெரிய மனிதருக்கு மனத்தில் ஒரு குறை இருந்தது. அது என்னவென்றால் தமக்கு வாரிசு இல்லை என்பதுதான். மகன் வேண்டுமென்ற தமது ஆசையை ஒருநாள் லாலாஜி பணிவுடன் சுவாமி சிவானந்தரிடம் கூறினார். லாலாஜியின் பக்திமிக்க சேவையால் மனம் நெகிழ்ந்துபோன சுவாமி சிவானந்தர் இறைவனிடம் அவருக்கு குழந்தைச் செல்வம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். இறைவனுடைய கருணையால் பத்ரிஷாவிற்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அவர் தமது குழந்தைக்கு, “சித்த தாஸ்” (மகான்களின் சேவகன்) என்று பெயர் வைத்தார். பிற்காலத்தில் அல்மோராவில் உள்ள பத்ரிஷாவின் வீட்டிற்கு சுவாமி விவேகானந்தர் உட்பட ஸ்ரீராமகிருஷ்ணரின் பல பக்தர்கள் வந்து தங்கினார்கள்.
1889–ஆம் ஆண்டின் இறுதியில் சுவாமிகள் வராக நகர மடம் வந்து சேர்ந்தார். அங்கேயே அவர் இரண்டாண்டு காலம் வாழ்ந்தார். 1891 அக்டோபரில் அவர் மீண்டும் புனிதப் பயணம் கிளம்பினார். இந்த முறை அவர் கங்கை, யமுனை நதிகள் சங்கமமாகும் பிரயாகைக்குச் (அலகாபாத்) சென்றார். அங்கிருந்து அவர் நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ள ஓங்காரநாத் சிவன் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். மத்திய இந்தியாவில் கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள பஞ்சவடி மற்றும் பம்பாய், புனா ஆகிய இடங்களுக்கும் சென்றார்.
1892–ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வராக நகர மடம் ஆலம்பஜாருக்கு மாற்றப்பட்டது. ஸ்ரீராமகிருஷ்ணரின் பிறந்தநாளின்போது சுவாமி சிவானந்தர் ஆலம்பஜார் மடம் திரும்பினார். அப்போது அவருடைய தந்தை இறந்துபோன துக்கச் செய்தி அவரிடம் தெரிவிக்கப்பட்டது. 1892 மார்ச் இறுதியில் சுவாமிகளும், சுவாமி ராமகிருஷ்ணானந்தரும் ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீசாரதாதேவி ஆகியோரின் ஜன்மபூமிகளான காமார்புகூர், ஜெயராம்பாடி ஆகிய இடங்களுக்குச் சென்று வந்தார்கள். சுவாமிகள் இருவரும் குருதேவரைச் சிறுவயது முதலே தெரிந்து வைத்திருந்த கிராமவாசிகள் பலரைச் சந்தித்து குருதேவரைப் பற்றிய பல சுவாரசியமான சம்பவங்களைக் கேட்டு மகிழ்ந்தனர். பக்திப் பெருக்கால் திளைத்த இருவரும் குருதேவர் வாழ்ந்த வீட்டின் முற்றத்தில் உருண்டு புரண்டு அந்தப் புனித மண்ணை எடுத்துத் தங்கள் தலைமேல் இட்டுக்கொண்டனர்.
அவர்கள் இருவரும் அன்னை ஸ்ரீசாரதாதேவியின் ஜென்ம பூமியான ஜெயராம்பாடி சென்று அங்கே சிலநாட்கள் தங்கியிருந்தனர். ஒருநாள் அவர்கள் அன்னைக்கு சமைத்துக் கொடுத்தனர். அங்கே இருந்தபோது சுவாமி சிவானந்தருக்கு மலேரியா நோய் கண்டது. நோயின் தீவிரம் குறையும் வரை அங்கே தங்கியிருந்த இருவரும் பிறகு ஆலம்பஜார் மடம் வந்து சேர்ந்தனர்.
1892 இறுதியில் சுவாமி சிவானந்தர், ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதை உபதேசித்த இடமான குருஷேத்திரத்திற்குக் கிளம்பினார். அங்கிருந்து அவர் வடமேற்கு இந்தியாவிலுள்ள ஜ்வாலாமுகி, சரோ ஆகிய புண்ணியத் தலங்களுக்குச் சென்று இறைவழிபாடு செய்தார். பிற்காலத்தில் அவர் நினைவுகூர்கிறார்:
“அந்தக் காலகட்டத்தில் நான் இறைவனைக் காணவேண்டும் என்று பேராவல் கொண்டிருந்தேன். நடக்கும்போதுகூட தெய்வ சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்த நான் அவரிடம் முழு மனத்துடன் பிரார்த்தனை செய்து வந்தேன். பயணிகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் சாலை வழியாகக்கூட செல்வதைத் தவிர்த்து தனியாகவே வாழ்ந்து பழகினேன். மாலை நேரத்தில் எங்காவது ஓர் இடத்தில் தங்கி தெய்வ சிந்தனையில் ஆழ்ந்திருப்பேன். இப்படி எந்த உடைமைகளும் இல்லாமல் தனியாக வாழும் மனிதன் இறைவனிடம் தன்னை முழுவதும் சமர்ப்பணம் செய்துவிட முடியும். நன்மை, தீமை ஆகியவற்றில் இறைவன் ஒருவனே நமக்குத் துணை என்பதை அவன் எளிதில் புரிந்துகொள்கிறான்.”
இமயமலையின்மீது சுவாமிகளுக்குத் தனியான விருப்பம் இருந்தது. 1893 மத்தியில் அவர் அல்மோரா சென்று அங்கே கொஞ்ச மாதங்கள் தங்கியிருந்தார். அங்கே அவர் ஆங்கிலேயரான இ.டி. ஸ்டர்டியைச் சந்தித்தார். தியாசபிஸ்டான (Theosophist) அவர் இமயமலையில் தங்கி இந்துத் துறவியைப் போல ராஜயோகம் பழகி வந்தார். சுவாமி சிவானந்தரின் நற்குணங்களால் மனம் கவரப்பட்ட அவர் சுவாமிகளுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார். சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் வெற்றிக்கொடி நாட்டிய விஷயத்தை அவர் சுவாமி சிவானந்தர் மூலமாக அறிந்துகொண்டார். இங்கிலாந்து திரும்பிய உடன் ஸ்டர்டி சுவாமி விவேகானந்தரைத் தங்கள் நாட்டிற்கு வரும்படி அழைத்து, அன்புடன் வரவேற்று அங்கே வேதாந்தத்தைப் பிரச்சாரம் செய்ய எல்லா ஏற்பாடுகளையும் முன்னின்று செய்து தந்தார்.
1893 அக்டோபர் 23–ஆம் தேதி சிவானந்தர் அல்மோராவிலிருந்து ராமேஸ்வரத்திற்குக் கிளம்பினார். பயணத்தின்போது ஆக்ரா, பிருந்தாவனம், ஜெய்ப்பூர், அபு, மும்பாய் ஆகிய இடங்களைச் சுற்றிப்பார்த்துவிட்டு சென்னை வந்து சேர்ந்தார். சுவாமி சிவானந்தர் சென்னைக்கு வந்திருக்கும் விஷயத்தை அறிந்துகொண்ட சுவாமி விவேகானந்தரின் சீடர்கள், அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்று, அமெரிக்காவிலிருந்து சுவாமிஜி எழுதியிருந்த உணர்ச்சிபூர்வமான கடிதங்களை அவரிடம் காட்டி மகிழ்ந்தனர்.
சென்னையிலிருந்து சுவாமி சிவானந்தர் காஞ்சி, சிதம்பரம், பெங்களூர், மதுரை, ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களுக்குச் சென்றார். பிறகு சென்னையில் நடைபெற்ற ஸ்ரீராமகிருஷ்ணரின் ஜெயந்திவிழாவில் கலந்துகொண்டு பக்தர்களை உற்சாகப்படுத்திய சுவாமிகள் ஆலம்பஜார் மடம் வந்து சேர்ந்தார். சென்னையில் சுவாமி சிவானந்தர் செய்திருக்கும் இறைப்பணியைப் பாராட்டி சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவிலிருந்து கடிதம் எழுதியிருந்தார்.
ஆன்மீக வாழ்க்கையில் இருக்கும் போராட்டங்களையும், கடினங்களையும் அவற்றை எதிர்த்துப் போராடி இறைவனைக் கண்ட மகான்களின் மூலமாகக் கேட்பது நன்மை பயப்பதாகும். சுவாமி சிவானந்தர் பிற்காலத்தில் நினைவுகூர்கிறார்:
“இந்த உடல் நிறைய மலைகளில் ஏறி இறங்கியிருக்கிறது; எத்தனையோ புண்ணியத் தலங்களுக்குச் சென்றிருக்கிறது; நினைக்கவே முடியாத அளவிற்கு தவம் செய்திருக்கிறது. ஒரேஒரு துணியை மட்டும் உடுத்திக்கொண்டு நான் வாழ்ந்த நாட்கள் அதிகம். எத்தனையோ இரவுகள் மரத்தடியில் படுத்து உறங்கியிருக்கிறேன். கொழுந்துவிட்டெரியும் துறவால் உடல் தேவைகளை முற்றிலும் புறக்கணித்து வருந்தித் தவம் செய்வதில் மகிழ்ச்சி அடைந்தேன். எவ்வளவோ தூரம் சுற்றியிருக்கிறேன். கையில் பணம் இல்லாமல் அலைந்தாலும் ஒருபோதும் எந்தச் சிக்கலிலும் நான் மாட்டிக்கொள்ளவில்லை. குருதேவர் எனக்கு அருகிலேயே இருந்து ஆபத்துக்களிலிருந்தும், இடர்ப்பாடுகளிலிருந்தும் என்னைக் காத்தார். நான் வயிற்றுப் பசியால் அவதிப்படவே இல்லை.”
1895 ஆரம்பத்தில் கான்பூருக்குச் சென்ற சுவாமிகள், அருகிலுள்ள பிரம்மவர்த்தாவில் வாழ்ந்துவரும் கண்டேராவ் பாபாவைச் சந்தித்தார். அந்த மகான் கங்கை நதிக்கரையில் ஒரே இடத்தில் முப்பத்தி எட்டு வருடங்கள் தங்கியிருந்து கடுந்தவ வாழ்க்கையை மேற்கொண்டிருந்தார். அவருடன் பேசிய போது சுவாமி சிவானந்தர் அவர் ஒரு பிரம்மஞானி என்பதை அறிந்துகொண்டார். சுவாமிகள் பெரிய மகான்களான திரைலங்க சுவாமிகள், சுவாமி பாஸ்கரானந்தர், சமேலிபுரி, மக்னிராம் பிரம்மச்சாரி ஆகியோரை வாரணாசியில் தரிசித்தார்.
“நான் விதுர் என்ற ஊரில் உள்ள மகானைச் சந்திக்க நடந்து சென்றுகொண்டிருந்தேன். மதியநேரம் மரத்தடி ஒன்றில் ஓய்வெடுக்கக் கொஞ்சம் தலை சாய்த்தேன். அந்தச் சமயத்தில் வில்வ மரத்திலிருந்து ஒரு பெரிய பழம் ஒன்று எனக்கு முன்பாக விழுந்து இரண்டாகப் பிளந்தது. நான் அந்தப் பழத்தை எடுத்து உண்டேன். அன்று எனக்குக் கிடைத்த உணவு அதுமட்டும்தான்” என்று சுவாமிகள் அன்று நடந்த நிகழ்ச்சியைப் பிற்காலத்தில் நினைவுகூர்ந்தார்.
A Man of God (இறைமனிதர்) என்ற நூலில் சுவாமி விவிதிஷானந்தர் பின்வருமாறு எழுதுகிறார்:
“ குருதேவர் வாழ்ந்த காலத்திலேயே மகாபுருஷ் மகராஜ் மூன்று முறை சமாதி நிலையை அனுபவித்திருக்கிறார். தவமும், தியானமும், சுற்றியலையும் துறவியாக வாழ்ந்த வாழ்க்கையும் அவரை அப்படிப்பட்டதொரு உயர்வான நிலைக்குக் கொண்டு சென்றன. பிற்காலத்தில் அவர் ஏற்றுக்கொள்ளப்போகும் மிகப் பெரிய ஆன்மீகப் பணிக்குத் தேவையான ஆழத்தையும், வலிமையையும் அதனால் அவர் பெற்றிருந்தார். அந்தப் பழைய வாழ்க்கையும், பிற்காலத்தில் அவர் பிறருக்குச் செய்த சேவையும்தான் அனைவரும் அவரை மகாபுருஷர் என்று அழைப்பதற்குக் காரணங்களாயின. எந்நேரமும் தெய்வ சிந்தனையிலேயே வாழ்ந்து அனைவருக்கும் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பொழிந்தார்.”
சுவாமி விவேகானந்தருடன்
1896 பிப்ரவரி மாதம் சுவாமி சிவானந்தர் ஆலம்பஜார் மடத்திற்குத் திரும்பினார். அதே சமயத்தில் சுவாமி விவேகானந்தர் மடத்திலுள்ள சகோதரச் சீடர்களுக்கு எழுதிய கடிதங்களில் அவர்களை ஒரே இடத்தில் வாழுமாறும், ஸ்ரீராமகிருஷ்ணரின் செய்தியை மக்கள் மத்தியில் பரப்பும் பணியில் ஈடுபடுமாறும், ஏழை மக்களுக்கு உதவ மக்கள்நலப் பணிகளை மேற்கொள்ளுமாறும் உற்சாகப்படுத்தினார்.
சுவாமி சிவானந்தர் சுவாமி விவேகானந்தரின் ஆணையை ஏற்றுக்கொண்டார். ஒருமுறை அவர் தம்முடைய வேலைகளுக்குப் பின்னால் உள்ள தத்துவத்தை விளக்கினார்: “குருதேவர் தமது பணிகளைத் தாமே செய்துகொள்கிறார். நாம் அவரது கருவிகள். உன்னுடைய மனத்தை இறைவன்மீது வை. நீ என்ன செய்ய வேண்டுமோ அதை அவரே செய்விப்பார். அகங்காரத்துடன் செய்யப்படும் வேலைகள் ஒரு பயனையும் தராது. அதனால் உலகத்திற்கு என்ன பெரிதாக நன்மை விளைந்துவிடப்போகிறது? கடும் தவம் இயற்றிய ஒருவரையே கடவுள் தமது கருவியாகக் கொள்கிறார்; அவர்மூலமாகப் பணி செய்கிறார். அத்தகையவரால் மட்டுமே சரியாக வேலை செய்ய முடியும். இந்தப் பின்னணி இல்லாமல் செய்யப்படும் பணியால் சக்தி விரயம்தான் ஆகுமே தவிர வேறொன்றும் நடக்காது.”
1897 ஜனவரி மாதம் சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவிலிருந்து தென்னிந்தியாவிற்கு வந்து சேர்ந்தார். சுவாமி சிவானந்தர் மதுரை சென்று அவரை வரவேற்றார். பரிவ்ராஜக வாழ்க்கை, கடின தவம், மேலைநாட்டுப் பணிகள், தென்னிந்தியாவில் சொற்பொழிவுகள் என்று கடினமாக வேலை செய்ததால் சுவாமி விவேகானந்தருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. எனவே அவர் ஓய்வெடுக்க இமயத்திலுள்ள கோடை வாசஸ்தலமான டார்ஜிலிங் புறப்பட்டார். சுவாமி சிவானந்தர் சாதனைகள் செய்வதற்காக அல்மோரா சென்றார்.
1897 மே மாதத்தில் சுவாமிஜியும் சுவாமி சிவானந்தரும் அல்மோராவில் இருந்தபோது சுவாமிஜி, பிறருடைய மனத்தைப் படிப்பது எப்படி என்பதை சிவானந்தருக்குக் கற்றுக்கொடுத்தார்.
சுவாமி விவேகானந்தரின் வேண்டுகோளின்படி சுவாமி சிவானந்தர் ஸ்ரீலங்கா சென்று, ஏழெட்டு மாத காலம் அங்கே தங்கி ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டார். சுவாமிகள் அங்கே நடத்திய பகவத் கீதை, ராஜயோக வகுப்புகளில் இந்துக்களும் ஐரோப்பியர்களும் ஏராளமாகக் கலந்துகொண்டு பயன்பெற்றனர். திருமதி. பிக்கட் என்ற பெண்மணியைத் தேர்ந்தெடுத்து அவருக்குப் பயிற்சி தந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் வேதாந்தப் பணிகளை மேற்கொள்ளுமாறு பணித்தார் சுவாமி சிவானந்தர்.
சுவாமிகள் ஸ்ரீலங்காவில் தங்கியிருந்தபோது அங்குள்ள பல கோயில்களுக்குச் சென்றார்; புத்தருடைய பல் வைக்கப்பட்டிருக்கும் கோயிலுக்குச் சென்று வணங்கினார். 1898 பிப்ரவரியில் சுவாமி சிவானந்தர் கல்கத்தா திரும்பினார். பிற்காலத்தில் துறவி ஒருவர் சிவானந்தரிடம் ஸ்ரீலங்கா பயணத்தைப்பற்றிக் கேட்டபோது அவர் “ எல்லா இடங்களிலும் நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். எனக்குப் பிடிக்காத இடங்கள் என்று எதுவும் கிடையாது. இறைவனைச் சார்ந்து வாழ முடியுமானால் ஒருவர் எல்லா இடங்களிலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்” என்று கூறினார்.
1898 பிப்ரவரி 27–ஆம் தேதி புதிதாகக் கட்டப்பட்ட பேலூர் ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி விவேகானந்தர் ஸ்ரீராமகிருஷ்ணரின் புனிதச் சாம்பல் அடங்கிய அஸ்திக்கலசத்தைத் தாமே சுமந்து சென்று நிறுவினார். அந்த நன்னாளின்போது சுவாமி சிவானந்தரும் உடன் இருந்தார்.
மடத்தில் தினமும் நடக்கும் சாஸ்திர வகுப்புகளுக்குத் துறவிகளும் பிரம்மச்சாரிகளும் கண்டிப்பாக வர வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் அறிவித்திருந்தார். சுவாமி சிவானந்தர் சாஸ்திர வகுப்புக்களைத் திறம்பட நடத்தியதுடன், கேள்விகளுக்குத் தெளிவாக பதில் அளித்தார். ஒரு கேள்வி-பதில் தொகுப்பின் முக்கியமான பகுதி ஒன்று கீழே தரப்பட்டுள்ளது.
14 மார்ச் 1898
கேள்வி: “உண்மை அவ்வப்போது தீயவர்களின் கையில் சிக்கிக்கொண்டு துன்பப்படுகிறதே ஏன்?”
சுவாமி சிவானந்தர்: “உண்மை எப்போதும் இன்னலுக்கு உட்படுவதில்லை. ஏனெனில் அது மனத்திற்கு அப்பாற்பட்ட விஷயம்; புலனறிவுக்கு எட்டாதது. உடல்தான் துன்புறுகிறதே தவிர ஆன்மா அல்ல. தீயவர்கள் உண்மையைத் துன்பப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு அதற்கு எப்போதும் புகழையே தேடித் தருகின்றனர்.”
15 ஏப்ரல் 1898
கேள்வி: “இந்த உலகம் உண்மையல்ல, பிரம்மம் மட்டுமே உண்மை என்பதை எப்படி நிரூபிப்பது?”
சுவாமி சிவானந்தர்: “உள்ளும் புறமும் நாம் கவனத்துடன் பார்க்கும்போது எல்லாம் மாறிக்கொண்டே இருப்பதை அறிகிறோம். மொத்த உலகமும் மாறிக்கொண்டே இருக்கிறது என்பதை இதன்மூலம் புரிந்துகொள்ளலாம். வெளியில் ஏற்படுவதாக நமது புலன்கள் நினைக்கின்ற மாற்றங்கள் அனைத்தும் உண்மையிலேயே நமக்குள் நிகழ்பவை. வெளி உலகம் எப்படி மாறுதலுக்குரியதோ அதேபோல் நமது அக உலகமும் மாறுதலுக்குரியது. ஒரு பொருளின் நிலைத்த தன்மை என்பது, எல்லாக் காலங்களிலும் அது இருக்கிறதா என்பதை வைத்துத்தான் தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, உலகம் என்ற மாபெரும் நிகழ்வில் ஒரு நொடிகூட நிலைக்காமல் எல்லாமே மாறிக்கொண்டுள்ளன. என்றும் நிலைத்திருக்கும் உண்மையைத் தேடும் நோக்குடன் நாம் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால், எல்லா மாற்றங்களுக்குப் பின்னாலும் அழியாத பரம்பொருள் உள்ளதை அறிந்துகொள்ளலாம். முதலில் தூலம், பிறகு கொஞ்சம் நுண்மை, அதற்குப் பிறகு அதைவிட நுண்மை என்று பொருட்களின் தன்மை அமைந்துள்ளன. வெளி உலகத்தில் நாம் ஆராய்ச்சி செய்கின்ற போதெல்லாம் அங்கே நிரந்தரமானதைக் கண்டறிய முடியாமல் திகைத்து நிற்கிறோம். அப்போதுதான் நாம் நமது ஆராய்ச்சியை நமக்குள் திருப்புகிறோம். இந்த அகநோக்கே எல்லையில்லாத பிரம்மத்தை, அறுதி ஒருமையை அடைவதற்கான ஒரே வழி.”
அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து, காலைக்கடன்களை முடித்து, கோயிலுக்குச் சென்று தியானம் செய்ய வேண்டும் என்று துறவிகளுக்கு சுவாமி விவேகானந்தர் உத்தரவிட்டிருந்தார். அப்படி யாராவது தியானம் செய்யவில்லையென்றால் அன்று முழுவதும் அவருக்கு மடத்தில் உணவு கிடையாது என்றும் சுவாமிஜி கூறியிருந்தார். ஒருநாள் சுவாமி சிவானந்தர் அதிகாலை தியானத்திற்குச் செல்லவில்லை. அதை அறிந்த சுவாமி விவேகானந்தர் அவரிடம் நியதியை நினைவுபடுத்தினார். சுவாமி சிவானந்தரும் உடனே பிச்சைக்காகக் கிளம்பிவிட்டார்.
அன்று மதிய உணவிற்கு மணி அடிக்கப்பட்ட பிறகும் சுவாமி விவேகானந்தர் சாப்பிடச் செல்லாமல் மேற்கு வராந்தாவில் நின்றுகொண்டு சுவாமி சிவானந்தரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அவர் வந்தவுடன் சுவாமிஜி சந்தோஷமாக “தாரக் அண்ணா, என்ன கொண்டு வந்தீர்கள்? பிச்சை உணவைச் சாப்பிட்டு வெகு நாட்களாகிவிட்டன. எனவே நீங்கள் கொண்டு வந்திருக்கும் உணவை நாம் இருவரும் பகிர்ந்து உண்போம்” என்று கூறினார். அதுபோலவே இருவரும் அந்தப் புனிதமான உணவை மகிழ்ச்சியாக உண்டனர்.
சுவாமி விவேகானந்தர் 1899 ஜூன் மாதம் இரண்டாம் முறையாக மேலைநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, 1900 டிசம்பரில் இந்தியா திரும்பினார். மாயாவதியில் தங்கியிருந்த சேவியரின் மரணச் செய்தியை அறிந்த சுவாமிஜி, அவரது மனைவியின் ஆறுதலுக்காக மாயாவதி சென்றார். சுவாமி சிவானந்தர், சுவாமி சதானந்தர் ஆகியோரை உடன் அழைத்துச் சென்றார். அங்கே இரண்டு வாரங்கள் தங்கியிருந்துவிட்டு அவர்கள் சமவெளிப்பகுதிக்கு வந்தனர்.
பிலிபிட் என்ற ஊருக்குச் சென்று சேர்ந்ததும் சுவாமிஜி சுவாமி சிவானந்தரை அழைத்து அங்குள்ள மக்கள் மத்தியில் குருதேவரின் செய்தியைப் பரப்புமாறும், அவர்களிடம் ராமகிருஷ்ண இயக்கத்திற்கு நன்கொடை வசூலிக்குமாறும் கேட்டுக்கொண்டார். இந்தக் காலகட்டத்தில் சுவாமி சிவானந்தர் உத்திரபிரதேசத்தில் நிறைய இடங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டதுடன் 1901–ஆம் வருடத்தின் இறுதியில் சுவாமி கல்யாணானந்தருக்கு உதவி செய்ய கங்கல் என்ற ஊர்போய்ச் சேர்ந்தார். 1902 பிப்ரவரி மாதத்தில் சுவாமிஜி வாரணாசிக்குப் போனார். அவருடன் கொஞ்ச காலம் தங்கிவிட்டு சுவாமி சிவானந்தர் பேலூர் மடம் வந்து சேர்ந்தார்.
பிற்காலத்தில் சுவாமி சிவானந்தர் துறவிகளிடம் பின்வருமாறு கூறினார்: “சுவாமி விவேகானந்தர் மகாசமாதி அடைவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னால் நாங்கள் இருவரும் முற்றத்திலுள்ள மாமரத்தின் கீழ் நின்று பேசிக்கொண்டிருந்தோம். சுவாமிஜி அப்போதுதான் கோயிலுக்குப் போய்விட்டு வந்திருந்தார். எதிர்காலத்தைக் கணித்துக் கூறுகின்ற வகையில் அவர் என்னிடம், ‘இதோபார், சுமார் எழுநூறு முதல் எண்ணூறு ஆண்டுகளுக்கு இந்த மடத்தில் ஆன்மீகம் கரைபுரண்டு ஓடப்போவது உறுதி’ என்றார். எங்கள் காலத்தில் அதை நாங்கள் சிறிதளவு உணர்கிறோம். உங்கள் காலத்தில் இன்னும் அதிகமாக உணர்வீர்கள். குருதேவரும், தேவியும்தான் இந்த இயக்கத்தை நடத்தி வருகிறார்கள்.”
சுவாமி விவேகானந்தர் வாரணாசியில் தங்கியிருந்தபோது பிங்கா மன்னர் அவரை அணுகி அங்கே ஆசிரமம் ஒன்றை ஏற்படுத்த ஐநூறு ரூபாய் நன்கொடை அளித்தார். சுவாமிஜி சுவாமி சிவானந்தரை அழைத்து வாரணாசிக்குப் போய் மடம் ஒன்றை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
வாரணாசியில்
1902 முதல் 1909 வரை சுவாமி சிவானந்தர் வாரணாசியில், பிங்கா மன்னரின் உதவியுடன் நிரந்தரமாக மடம் ஒன்றை நிறுவும் பணியில் கவனம் செலுத்தி வந்தார். அங்கே நிறுவப்பட்ட மடத்திற்கு ஸ்ரீராமகிருஷ்ணர் அத்வைத ஆசிரமம் என்னும் பெயரைச் சூட்டினார்.
சுவாமி சிவானந்தரின் வாழ்க்கையைப் பற்றிய குறிப்புகள் துறவி ஒருவரின் நாட்குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது:
“புலித்தோலும், அதன்மேல் ஒரு போர்வையும்தான் அவருடைய படுக்கை. நல்ல குளிர்காலத்தில்கூட சுவாமிகள் தரையில்தான் படுத்து உறங்குவார். முதலில் வைக்கோலைத் தரையில் பரப்பி அதன்மேல் புலித்தோலைப் போட்டுப் படுக்கையைத் தயார் செய்வார். பிறகு போர்வையால் போர்த்திக்கொண்டு படுத்து உறங்குவார். சில சமயங்களில் நடுஇரவு இரண்டு மணி வரையிலும் குளிர்காய்வதற்கான நெருப்பின் அருகில் அமர்ந்து தியானம் செய்வார். அதிகாலையில் கோயில் கதவைத் திறந்து சென்று, கீதை, சண்டி, உபநிஷதங்களை நீண்ட நேரம் ஓதுவார். அதற்குப் பிறகு மடத்து வேலைகளைக் கண்காணிப்பார். பிறகு குளித்துவிட்டு கோயிலில் தினசரி பூஜையைச் செய்வார். கிடைத்த உணவை குருதேவருக்கு நைவேத்தியம் செய்து, பிரசாதத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து உண்பார். அவர் சிலநேரங்களில் மெல்லிய குரலில் பாடுவதும் உண்டு. மதியமும் அவர் தியானம் செய்வார். மாலை ஆரதி முடிந்தபிறகு அவர் குருதேவருக்கு உணவு கொண்டு செல்லப்படும் வரை தியானத்தில் ஆழ்ந்திருப்பார். எப்போதும் அகமுகமாக இருக்கும் அவரிடம் பேசுவதற்கே எங்களுக்குத் தயக்கமாக இருக்கும்.”
பிங்கா மன்னர் தந்த நன்கொடை (500 ரூபாய்) தீர்ந்த பிறகு ஆசிரமத்தின் நிதிநிலைமை மோசமடைந்துவிட்டது. துரதிர்ஷ்டவசமாக, வீட்டு வாடகை தருவதற்கு சுவாமிகள் சிரமப்பட்டு சேகரித்த 100 ரூபாய் பணத்தை மடத்தில் வேலை செய்து வந்த ஒருவன் திருடிக்கொண்டு ஓடிவிட்டான். சுவாமிகள் விஷயத்தை வீட்டின் சொந்தக்காரரிடம் போய்ச் சொன்னார். வாடகைப் பணத்தைத் தவணை முறையில் கட்டுவதற்கு ஏற்பாடானது. சுவாமிகளைப் பற்றி அறிந்த மக்கள் அவரது நிதி நெருக்கடியைப் போக்க முன்வந்தார்கள். பக்தர்களின் உதவியுடன் சுவாமி சிவானந்தர் ஆசிரமத்திலேயே ஏழைச் சிறுவர்களுக்காக இலவச பாலர் பள்ளி ஒன்றை ஆரம்பித்தார். சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகளை இந்தியில் மொழிபெயர்த்து மக்கள் மத்தியில் வினியோகித்தார் அவர். வாரணாசி வாழ் பண்டிதர்கள் சுவாமி சிவானந்தரைத் தரிசித்து அவரது மகிமையை உணர்ந்து சென்றார்கள்.
பேலூர் மடத்திலும் மற்ற இடங்களிலும்
1909–ஆம் ஆண்டு சுவாமி சிவானந்தர் வாரணாசியில் அத்வைத ஆசிரமத்தின் நிர்வாகப் பொறுப்புக்களை உதவியாளராகப் பணியாற்றிய துறவி ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு பேலூர் மடம் திரும்பினார். அப்போது சுவாமி பிரம்மானந்தர் ராமகிருஷ்ண இயக்கத்தின் தலைவராக இருந்தார்; சுவாமி பிரேமானந்தர் மேலாளராக பேலூர் மடத்தை நிர்வகித்து வந்தார். சுவாமி பிரேமானந்தர் அலுவல் விஷயமாக கல்கத்தாவிற்கோ வேறு இடங்களுக்கோ சென்றுவிட்டால் சுவாமி சிவானந்தர்தான் மடத்தை நிர்வகிப்பார்; நித்திய பூஜை செய்வார். பூஜைபற்றி ஒருநாள் அவர் கூறினார்:
“இப்போது பூஜையில் புறச் சடங்குகள் அதிகமாகிவிட்டன. நாங்கள் அன்பையும் பக்தியையும் அடிப்படையாகக் கொண்டே பூஜைகள் செய்தோம். குருதேவர் தட்சிணேசுவரத்தில் தமது அறையில் கட்டிலில் எவ்வாறு அமர்ந்திருப்பாரோ அதேபோல் உயிருணர்வுடன் எங்கள் முன்னால் அமர்ந்திருப்பதாகக் கற்பனை செய்து,எளிய சடங்குகளுடன் நாங்கள் அவரை வழிபட்டோம். ஆசாரமான சடங்குகளை மேற்கொண்டாலும் அவற்றிற்கெல்லாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. குருதேவர் நமது இதயங்களில் எழுந்தருளியிருக்கும் இறைவன் ஆவார். அவர் நம்மிடம் வேண்டுவதெல்லாம் உண்மையான பக்தியையும், முழுமையான ஈடுபாட்டையும்தான்.”
1910–ஆம் ஆண்டு ஸ்ரீராமகிருஷ்ணரின் ஜெயந்தி விழா நெருங்கிக்கொண்டிருந்த நேரத்தில் இந்தியாவின் வைசிராய் மற்றும் கவர்னர் ஜெனரலான லார்ட் மின்டோவின் மனைவியான லேடி மின்டோ பேலூர் மடத்திற்கு வந்தார். சுவாமி சிவானந்தர் அவரை அன்புடன் வரவேற்று மடத்தைச் சுற்றிக்காட்டினார். அதுவரை லேடி மின்டோ சுவாமி விவேகானந்தர்தான் ராமகிருஷ்ண இயக்கத்தை ஆரம்பித்தார் என்றே எண்ணியிருந்தார். ஆனால் சுவாமி சிவானந்தர் அவரிடம், “சுவாமி விவேகானந்தரோ, மற்ற சகோதரச் சீடர்களோ இந்த இயக்கத்தை ஆரம்பிக்கவில்லை. காசிப்பூரில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது ஸ்ரீராமகிருஷ்ணரே இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். இயக்கத்தை நடத்துவது, பணிகளைச் செய்வது, இயக்கத்திலுள்ள பல்வேறு விஷயங்களைக் கையாள்வது ஆகிய விஷயங்களை அப்போது குருதேவர் சுவாமி விவேகானந்தருக்குத் தனியாகக் கற்றுக்கொடுத்தார்” என்று கூறினார்.
அதே வருடத்தில் சுவாமி சிவானந்தர், சுவாமி துரீயானந்தர், சுவாமி பிரேமானந்தர், பிரம்மச்சாரி குருதாஸ் ஆகியோர் அமர்நாத்திற்குச் சென்றார்கள். இது ஒரு கடினமான பயணமாகும். பிறகு காஷ்மீரில் மூன்று மாதங்கள் தங்கியிருந்து நிறைய இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு சுவாமி சிவானந்தர் வாரணாசி வந்து சேர்ந்தார். அங்கே அவருக்கு ரத்தக் கடுப்பு நோய் ஏற்பட்டது. பேலூர் மடத்திற்கு அவர் வந்து சேர்ந்தபிறகும் மீண்டும் அதே நோய் அவரைத் தாக்கியது. சிகிச்சைக்காக அவர் கல்கத்தாவிற்கு அனுப்பப்பட்டார். அங்கே நீண்ட நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்ட சுவாமிகள் ஒரு வழியாகக் குணமடைந்தார். அந்த நாட்களிலெல்லாம் அவர் வெறும் அரிசிச் சாதமும், ருசியோ மணமோ இல்லாத சூப்பும்தான் உண்டு வாழ்ந்தார். சுவையோ, மணமோ இல்லாத அந்த சூப்பிற்கு, சுவாமி சாரதானந்தர் வேடிக்கையாக “மகாபுருஷ் சூப்” என்று பெயர் வைத்திருந்தார். “நாக்கை அடக்கியவனால் எல்லாவற்றையும் அடக்க முடியும்” என்று பாகவதம் கூறுவது இங்கே நினைவுகூரத் தக்கது.
பயணம் செய்யாதபோது சுவாமி சிவானந்தர் பக்தர்களின் கடிதங்களுக்குப் பதில் எழுதுவார். 1912 ஜூலை 15–ஆம் தேதி அவர் பின்வருமாறு எழுதுகிறார்:
“வழக்கம்போல் ஜபதியானத்தைத் தொடர்ந்து செய். அதனால் உனக்கு கெடுதல் எதுவும் ஏற்படாது. முதலில் ஸ்ரீராமகிருஷ்ணரின் படத்தை உனக்கு முன்னால் வை. பிறகு கண்களை மூடிக்கொண்டு, அவர் உனது இதயத்தில் எழுந்தருளி இருப்பதாக எண்ணிக்கொள். அவரிடம் உண்மையான அன்புடன் பிரார்த்தனை செய். அவருடைய கல்யாண குணங்களைப் பின்வருமாறு நினை:
‘குருதேவர் சச்சிதானந்தப் பரம்பொருளே. மனிதகுலத்தை முக்திப் பாதையில் வழிநடத்துவதற்கு அவர் முன்புபோல் இந்த முறையும் மனித வடிவில் அவதரித்துள்ளார்; ஸ்ரீராமகிருஷ்ணராக அவதரித்து மக்களின் நம்பிக்கையையும் பக்தியையும் வளர்க்கிறார்; இன்றும் வளர்த்துவருகிறார், எதிர்காலத்திலும் தொடர்ந்து செய்வார். அவரே நமது தந்தை, தாய், நண்பர், குரு எல்லாம்.’ இவ்வாறு எண்ணி அவரிடம் சரணடை.”
1913 ஜூன் 16–ஆம் தேதி சுவாமி சிவானந்தர் அல்மோரா சென்றார். அங்கே குருதேவரின் இல்லறச் சீடரான பல்டுகர் என்பவரின் அழைப்பை ஏற்று அவருடைய இல்லத்தில் விருந்தினராகத் தங்கினார். அங்கே சுமார் ஒன்றரை வருடகாலம் தங்கியிருந்து பக்தர்களிடம் ஆன்மீக வாழ்க்கையைப் பற்றியும், சாதனைகள் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக் கூறினார். அந்தக் காலகட்டத்தில் அவர் எழுதிய சில அற்புதமான கடிதங்களைப் படிக்கும்போது அவருடைய மனநிலை அப்போது எப்படி இருந்தது என்பதை அறிந்துகொள்ளலாம். அவற்றிலிருந்து சில தொகுப்புகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன:
17 செப்டம்பர் 1913: “இறைவனைத் தேடுவதா, முக்தியை நாடுவதா என்று நீ கேட்டுள்ளாய். உனது கேள்விக்கு எனது பதில் இதுதான்: ‘இறைவன்.’ இறைவனை மட்டுமே விரும்பு. அவரை அடைந்துவிட்டால் உள்ளங்கை நெல்லிக்கனிபோல முக்தி கிடைக்கிறது.”
30 அக்டோபர் 1914: “இறைவனை அழைப்பதற்குத் தனியாக எந்த விதிமுறையும் இல்லை. அவரை நேசிக்க முயற்சி செய், அவ்வளவுதான். ‘அவரை எப்படி நேசிப்பது?’ என்பதுதானே உனது கேள்வி! அதற்கு எனது பதில் இதுதான்: ‘அவரை அழைக்காமல், அவரை நினைக்காமல் உன்னால் வாழ முடியாது என்ற நிலை வரும்போதுதான் இறைவன் உன்னை நேசிக்கிறார் என்பதை நீ அறிந்துகொள்ள முடியும்.’ அவர் நம்மை நேசிக்கவில்லையென்றால் யாராலும் அவரை நேசிக்க முடியாது. வாழ்விலும் சரி, சாவிலும் சரி அவரே நமக்கு எல்லாம்.”
1914 நவம்பர் 6–ஆம் தேதி சுவாமி சிவானந்தர் வாரணாசி சென்று சுவாமி பிரம்மானந்தர், பிரேமானந்தர், துரீயானந்தர் ஆகியோர்களைச் சந்தித்தார். சீடர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தபோது குருதேவருடன் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி பேசினர். இதனால் அங்கிருந்த இளம் துறவிகள், பக்தர்கள் ஆகியோர்களின் மனநிலை எப்போதும் உயர்ந்த நிலையிலேயே இருந்தது.
ஒருநாள் பக்தர் ஒருவர் சுவாமி சிவானந்தரிடம், தமது பாவங்கள் நிறைந்த பழைய வாழ்க்கையைப் பற்றிக்கூறி வருத்தப்பட்டார். உடனே சுவாமி சிவானந்தர் அவரிடம், “குருதேவர் இதைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? பாவங்கள் பஞ்சு மலையைப் போன்றவை. எவ்வளவு பெரிய மலையாக இருந்தாலும் அதைச் சாம்பலாக்க சிறு நெருப்புப் பொறி போதும். இறைவனின் அருளானது நெருப்புப் பொறியைப் போன்றது. எத்தனை பெரிய பாவத்தையும் அது சாம்பலாக்கிவிடும். எனவே பயப்படாதே. இறைவனுடைய திருநாமத்தைச் சொல். அவரை அழை. வேறு எதுவும் தேவையில்லை” என்று கூறித் தேற்றினார்.
1914 நவம்பரில் சுவாமி சிவானந்தர் பேலூர் மடத்திற்குத் திரும்பினார். ஸ்ரீராமகிருஷ்ணரின் ஜெயந்தி விழா முடிவடைந்தபிறகு 1915–ஆம் ஆண்டின் வசந்தகாலத்தில் சுவாமிகள் ராஞ்சி சென்று அங்கே நடைபெற்ற ராமகிருஷ்ண விழாவில் கலந்துகொண்டார். பக்தர் ஒருவர் நினைவுகூர்கிறார்:
“சுவாமிகள் இங்கே இரண்டு மூன்று நாட்கள் தங்கியிருந்தார். அவர் இங்கே தங்கியிருந்த கொஞ்ச காலத்திலேயே எங்களுக்குள் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடச் செய்தார். குருதேவர், அன்னை ஸ்ரீசாரதாதேவி ஆகியோர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற அற்புத சம்பவங்களை சுவாமிகள் எடுத்துரைத்தார். அப்போது பக்தர் ஒருவர் வருத்தத்துடன், ‘மகராஜ், எங்களால் குருதேவரைப் பற்றிக் கேட்க மட்டுமே முடிந்தது; பார்க்க முடியவில்லையே!’ என்று கூறினார். சுவாமிகள் உடனே, ‘ஏன்! மகனைக் கண்டவன் தந்தையைக் கண்டவன் தானே! நானும் எனது தந்தையும் ஒருவரே’ என்றார். அவருடைய வார்த்தைகளைக் கேட்ட நாங்கள் மெய்மறந்து விட்டோம். ஆழ்ந்த பொருளுடைய அந்த வார்த்தைகள் இன்றும் எங்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டே உள்ளன.”
1918–ஆம் ஆண்டு சுவாமி பிரேமானந்தர் மகாசமாதி அடைந்தபோது சுவாமிகள், “எனது இதயத்தில் ஏற்பட்டுள்ள வெறுமையை வார்த்தைகளால் விளக்க முடியாது. இமயத்திற்குக் கிளம்பிச் சென்று இந்த உலகத்துடன் எந்தவிதமான தொடர்பும் கொள்ளாமல் எப்போதும் சமாதி நிலையிலேயே இருந்து உயிரை விட்டுவிட வேண்டும் என்று பல சமயங்களில் நான் எண்ணியதுண்டு” என்றார். ஆனால் அவரது எண்ணம் ஈடேறவில்லை. ஏனெனில் மடத்து நிர்வாகம் என்ற மிகப் பெரிய பொறுப்பை அவர் ஏற்க வேண்டியிருந்தது!
எப்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்களின் வாழ்க்கை இளம்துறவிகளுக்கு எப்போதும் முன்மாதிரியாக அமைந்திருந்தது. சுவாமிகள் அதிகாலையில் கோயில் கதவு திறந்தவுடனே சென்று தியானத்தில் அமர்வார். ஏழுமணி வரையிலும் தியானம் செய்வார். பிறகு தமது அறைக்கு வந்து துறவிகளிடம் ஆன்மீக வாழ்க்கையைப் பற்றிப் பேசி அவர்களை உற்சாகப்படுத்துவார். அவர்களுடைய உடல் ஆரோக்கியம், மற்ற பிரச்சினைகள்பற்றி விசாரித்து அறிந்துகொள்வார். ஸ்ரீராமகிருஷ்ணருக்கு நடைபெறும் பூஜை, நைவேத்தியம், மலர்கள், காய்கறித் தோட்டம், பால்பண்ணை, அருகில் வசிப்பவர்களுடைய நலன் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தினார் அவர். சில சமயங்களில் அவர் பேலூர் மடத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்று செயற்குழு உறுப்பினர்களுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்குவார்.
பேலூர் மடம் அருகில் வாழும் ஏழை மக்களுக்கும், மடத்துத் துறவிகளுக்குமாக இலவச மருத்துவமனை ஒன்றை நடத்தியது. இலவச மருத்துவமனையின் பொறுப்பாளராக இருந்த துறவி நினைவுகூர்கிறார்:
“அது நல்ல மழைக்காலம். எங்கு பார்த்தாலும் நோய், குறிப்பாக மலேரியாவால் மக்கள் அவதிப்பட்டனர். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகத் தொடங்கியது. எனக்கு உதவி செய்துகொண்டிருந்த கம்பவுண்டரும் உடல்நிலை சரியில்லாமல் படுத்துவிடவே நிலைமை மேலும் சிக்கலாகிவிட்டது. தனியாக எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள நான் மிகவும் சிரமப்பட்டேன்.
“ஒருநாள் மகாபுருஷ் மகராஜ் மருத்துவமனைக்கு வந்தார். விவரங்களைக் கேட்டறிந்தபிறகு அவர், ‘இப்போது உனக்குச் சிரமமாக உள்ளது இல்லையா? நான் உதவி செய்யட்டுமா?’ என்று கனிவுடன் கேட்டார். நான் உடனே, ‘அதெல்லாம் எதற்கு மகராஜ்? உங்கள் ஆசீர்வாதம் இருந்தால் இந்த வேலையை நானே சமாளித்துக்கொள்வேன்’ என்று கூறினேன். மடத்தில் யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டால் அவர் மிகவும் வருத்தப்படுவார். அவரைப் பற்றிய விவரங்களை ஒருநாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை கேட்டுத் தெரிந்துகொள்வார். ஆஹா! எங்கள்மீதுதான் அவருக்கு எவ்வளவு அக்கறை! எங்கள்மீது அவர் செலுத்திய அன்புதான் எவ்வளவு ஆழமானது!”
சுவாமி சிவானந்தரின் வாழ்க்கை முறை மிகவும் எளிமையானது. அவர் தினமும் துறவிகளுக்கும் பக்தர்களுக்கும் கடிதங்கள் எழுதினார். மத்தியான நேரத்தில் பக்தர்களைச் சந்தித்து. அவர்களுடைய கேள்விகளுக்குப் பதிலளிப்பார். ஸ்ரீராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரிடமிருந்து தாம் கற்றவற்றை எடுத்துக் கூறுவார். மாலையில் கோயிலுக்குச் சென்று ஆரதியில் கலந்துகொள்வார். அதற்குப் பிறகு அங்கேயே அமர்ந்து தியானம் செய்வார். ஸ்ரீராமகிருஷ்ணருக்குப் படைக்கப்பட்ட பிரசாதத்தையும் சாதாரண உணவையும் மற்ற துறவிகளுடன் சேர்ந்து உண்பார். மிகவும் எளிமையான ஆடைகளையே அவர் அணிவார். 1922 வரையிலும் இரண்டு வேட்டிகள், ஒரு சட்டை, ஒரு துண்டு, ஒரு ஜோடி செருப்பு ஆகியவைதான் அவரிடம் இருந்தன. கல்கத்தாவிற்கும் மற்ற இடங்களுக்கும் போகும்போது உடுத்திக்கொள்ள மாற்றுத் துணியும், ஒரு ஜோடி காலணிகளையும் அவர் வைத்திருந்தார்.
1921 பிப்ரவரி 6–ஆம் தேதி மகாத்மா காந்தி, அவரது மனைவி, மோதிலால் நேரு, முகமது அலி ஆகிய தேசியத் தலைவர்கள் பேலூர் மடத்திற்கு வந்து சுவாமி விவேகானந்த ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டனர். சுவாமி சிவானந்தர் அவர்களை அன்புடன் வரவேற்றார்; சுவாமி விவேகானந்தர் வாழ்ந்த அறைக்கும், அவரது கோயிலுக்கும் அவர்களை அழைத்துச் சென்று காண்பித்தார். சுவாமி சிவானந்தர் காந்திஜியின் நேர்மை, மக்கள் மீது அவருக்கு இருக்கும் அன்பு ஆகியவற்றால் கவரப்பட்டு அவரை மிகவும் நேசித்தார். காந்திஜி ராமகிருஷ்ண இயக்கத்தின் செயல்பாடுகளைக் கவனமுடன் கேட்டு அறிந்துகொண்டார்; ஸ்ரீராமகிருஷ்ணரின் புனிதச் சாம்பல் அடங்கிய அஸ்திக் கலசத்தை பக்தியுடன் தொட்டு வணங்கினார். மடத்தில் ஏராளம் பக்தர்கள் கூடியதைக் கண்ட காந்திஜி அவர்கள் முன்பு சிற்றுரை ஒன்றை நிகழ்த்தினார்:
“ஒத்துழையாமை இயக்கம், கைராட்டை போன்ற எனது கொள்கைகளைப் பரப்புவதற்காக நான் இப்போது உங்களிடம் பேசவில்லை. சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான இன்று அவரை நினைவுகூரும் வகையில் எனது வணக்கங்களை பணிவன்புடன் சமர்ப்பிக்க விரும்புகிறேன். நான் சுவாமி விவேகானந்தரின் இலக்கியத்தைப் படித்துள்ளேன். அதற்குப் பிறகு இந்தியாவின்மீது எனக்கு இருந்த அன்பு அதிகமாகிவிட்டதை உணர்கிறேன். சுவாமி விவேகானந்தர் வாழ்ந்த இந்த மடத்தைவிட்டுக் கிளம்பும்போது வெறும் கையுடன் திரும்பிவிடாமல் அவரது மாபெரும் சிந்தனைகளை நெஞ்சத்தில் தாங்கிச் செல்லுங்கள்— இந்திய இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்.”
1921 ஏப்ரல் 1–ஆம் தேதி சுவாமி சிவானந்தர் சுவாமி பிரம்மானந்தருடன் தென்னிந்தியா வந்தார். வழியில் அவர்கள் புவனேஸ்வரம், வால்டேர் ஆகிய இடங்களில் தங்கிவிட்டு ஏப்ரல் 25–ஆம் தேதி சென்னை வந்து சேர்ந்தார்கள். சென்னையில் சுவாமி பிரம்மானந்தர் மாணவர் விடுதி ஒன்றைத் திறந்து வைத்தார். ஜூன் 14–ஆம் தேதி அவர்கள் பெங்களூர் சென்று அங்கே நான்கு மாதங்கள் தங்கியிருந்தார்கள். செப்டம்பர் 11–ஆம் தேதி சுவாமி சிவானந்தர் துறவி ஒருவருக்குப் பின்வருமாறு எழுதுகிறார்:
“சிலநாட்கள் தங்குவதற்காக நான் மைசூர் போய்ச் சேர்ந்தேன். அங்கே மலைமீது எழுந்தருளியிருக்கும் சாமுண்டி தேவியின் கோயிலுக்குச் சென்று வழிபட்டேன்; சன்னிதானத்தில் அமர்ந்து சண்டி பாராயணம் செய்தேன். அங்கிருந்து முப்பத்திரண்டு மைல் தொலைவிலுள்ள மேல்கோட்டை சென்று அங்கே எழுந்தருளியிருக்கும் நாராயணனை வழிபட்டேன். அங்கேதான் ஸ்ரீராமானுஜர் விசிஷ்டாத்வைதத்தைப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். வைணவர்கள் போற்றி வழிபடும் தலங்களில் முக்கியமானது இது.”
சாமுண்டி தேவியைப் பற்றி அவர், “ஆஹா! அங்கே தேவி எழுந்தருளியிருப்பதை என்னால் தெளிவாக உணர முடிந்தது. அவளுடைய கருணையால் எனக்கு தரிசனமும் கிட்டியது” என்று கூறினார்.
பெங்களூரிலிருந்து புறப்பட்டு சுவாமி சிவானந்தரும் சுவாமி பிரம்மானந்தரும் சென்னை வந்து சேர்ந்தனர். சென்னையில் நடைபெற்ற துர்க்கா பூஜை, காளி பூஜைகளில் கலந்துகொண்ட பிறகு அவர்கள் இருவரும் நவம்பர் 19–ஆம் தேதி புவனேஸ்வரம் சென்றனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் புறப்பட்டு 1922 ஜனவரி 12–ஆம் தேதி பேலூர் மடம் வந்தனர். கிழக்கு வங்காள பக்தர்கள் வேண்டிக்கொண்டதன் பேரில் சுவாமி சிவானந்தரும், சுவாமி அபேதானந்தரும், இன்னும் சில துறவிகளும் டாக்காவிற்குப் புறப்பட்டனர்.
சுவாமி சிவானந்தர் சொற்பொழிவாளர் இல்லையென்றாலும் அவருடைய உணர்வுபூர்வமான பேச்சு ஆன்மதாகம் கொண்டிருந்த பக்தர்களின் நெஞ்சங்களைக் கவரவல்லது. அவருடைய பேச்சால் கவரப்பட்ட சிலர் அவரிடம் மந்திர தீட்சை பெற்றுக்கொள்ள விரும்பினார்கள். ஆனால் சுவாமிகள் அதற்கு மறுத்துவிட்டார். சுவாமி சிவானந்தருக்கு குருநிலை வகிக்க வேண்டும் என்ற எண்ணம் எதுவும் கிடையாது.
ஒருநாள் காலையில் துறவி ஒருவரிடம் அவர், “நேற்றிரவு நான் அன்னை ஸ்ரீசாரதாதேவியைக் கனவில் தரிசித்தேன். அப்போது அவர் என்னிடம், ‘மகனே, நீயே பக்தர்களுக்கு மந்திர தீட்சை கொடுக்கத் தயங்கினால் வேறு யார்தான் கொடுப்பார்கள்?’ என்று கேட்டார். இங்கே பார், இப்போது எனக்கு அன்னையிடமிருந்து ஆணை கிடைத்துவிட்டது” என்று கூறினார். இருந்தாலும் அவர் சுவாமி பிரம்மானந்தருக்குக் கடிதம் எழுதி இந்த விஷயத்தில் அவருடைய ஆலோசனையை வேண்டினார்.
சுவாமி பிரம்மானந்தர் சந்தோஷமாக பதில் கடிதம் ஒன்றை எழுதினார். அதில் அவர், “எந்தவிதமான தயக்கமும்இல்லாமல் பக்தர்களுக்கு மந்திர தீட்சை வழங்குங்கள். உங்கள்மூலமாக தீட்சை பெறுபவர்கள் அனைவரும் நிச்சயமாக ஆசீர்வதிக்கப்படுவார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
டாக்காவில் ஒருநாள் சுவாமி சிவானந்தர் உரையாற்றிக்கொண்டிருந்த போது பக்தர்களிடம் பின்வரும் விஷயத்தைத் தெரிவித்தார்: “தட்சிணேசுவர நாட்களில் குருதேவர் ஒருநாள் சுவாமிஜி, சுவாமி பிரம்மானந்தர் மற்றும் என்னிடம், ‘நீங்கள் எதிர்காலத்தில் நிறைய பக்தர்களுக்கு மந்திர தீட்சை வழங்குவீர்கள்’ என்று கூறினார். குருதேவரின் வார்த்தைகள் வீண்போகுமா என்ன? பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர் சொன்னது இன்று உண்மையாகிவிட்டது.” டாக்காவிலும் மைமன்சிங்கிலும் அவர் பல பக்தர்களுக்கு மந்திர தீட்சை வழங்கினார்.
டாக்காவில் ஒருநாள் பக்தர் ஒருவர் சுவாமிகளை அணுகி, “நாங்கள் ஏழைகள். அதனால் எங்கள் வீட்டிற்கு வர மாட்டீர்கள் அல்லவா?” என்று கேட்டார். சுவாமிகள் உடனே, “ஆம், நீ சொன்னது சரிதான். நாங்கள் ஏழைகளின் வீட்டிற்குப் போவதில்லை” என்று கூறிவிட்டார். சுவாமிகளின் பதிலால் மன வருத்தத்திற்கு உள்ளான அந்த ஏழை பக்தர் அமைதியாக அந்த இடத்தைவிட்டு அகன்றுவிட்டார். மறுநாள் சுவாமி சிவானந்தர் தமது உதவியாளருடன் இரண்டு மைல் தூரம் நடந்தே சென்று அந்த பக்தரின் வீட்டை அடைந்தார். சுவாமிகளை அங்கே எதிர்பார்க்காத அந்த பக்தர் மகிழ்ச்சியுடன், “நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்! மகராஜ், தயவுசெய்து இந்த ஏழையின் வீட்டிற்குள் வாருங்கள்” என்று வரவேற்றார். சுவாமி சிவானந்தர் புன்னகை புரிந்தபடியே அவரிடம், “நாங்கள் ஏழைகளின் வீடுகளுக்குப் போவதில்லை. ஆனால் கடவுள் உறைகின்ற பக்தர்களின் வீடுகளுக்குத்தான் போவோம்— இறைச் செல்வம் நிறைந்த செல்வந்தர்களின் வீடுகள் அல்லவா அவை!” என்று கூறினார்.
1922 மார்ச் இறுதியில் சுவாமி பிரம்மானந்தருக்குக் காலரா நோய் கண்டது. அத்துடன் அவருக்கு நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்து வந்த நீரழிவு வியாதியும் அதிகரித்துவிட்டது. இந்தச் செய்தியைக் கேட்டவுடனே சுவாமி சிவானந்தர் கல்கத்தா விரைந்தார். அவரைச் சந்தித்ததில் சுவாமி பிரம்மானந்தரும் மகிழ்ச்சியடைந்தார். சிறந்த மருத்துவர்கள் அழைக்கப்பட்டு சுவாமி பிரம்மானந்தருக்குச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஆனால் அவருடைய நிலைமை நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டே போனது. அவருடைய ஆரோக்கியத்திற்காக சுவாமி சிவானந்தர் குருதேவரிடம் பிரார்த்தனை செய்தார்.
சுவாமி பிரம்மானந்தர் மகாசமாதி அடைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, சுவாமி சிவானந்தர் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது குருதேவர் அவர் முன்பு தோன்றினார். அவரிடம் சுவாமி பிரம்மானந்தரை உயிர்பிழைக்க வைக்குமாறு சுவாமி சிவானந்தர் கேட்டார். ஆனால் குருதேவர் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டதுடன் உடனே மறைந்தும்விட்டார். அன்றிரவு இதேபோன்று மூன்று முறை நடந்தது. கடைசியில் தமது ஆன்மீகச் செல்வரான சுவாமி பிரம்மானந்தரை குருதேவர் அழைத்துக்கொள்ள முடிவு செய்துவிட்டார் என்பதை சுவாமி சிவானந்தர் அறிந்துகொண்டார். அதேபோல் சுவாமி பிரம்மானந்தரும் 1922 ஏப்ரல் 10–ஆம் தேதி குருதேவரிடம் போய்ச் சேர்ந்தார்.
ராமகிருஷ்ண இயக்கத்தின் தலைவராக
1901–ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் சுவாமி சிவானந்தரை ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தார். 1910–ஆம் ஆண்டு அவர் இயக்கத்தின் உபதலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1922–ஆம் ஆண்டு சுவாமி பிரம்மானந்தரின் மறைவிற்குப் பிறகு அவர் ராமகிருஷ்ண இயக்கத்தின் தலைவரானார்.
சுவாமிகள் குருதேவரின் கைகளில் ஓர் உன்னதமான கருவியாக இருந்து தலைமைப் பொறுப்பை வகித்து வந்தார். ஒருநாள் அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்: “குருதேவருக்கு நன்றாக விளையாடத் தெரியும். வெறும் சோழியை வைத்துக்கொண்டு மொத்த ஆட்டத்தையும் அவர் வென்றுவிடுவார். எனக்கு என்ன தகுதி இருக்கிறது? நான் படித்தவனா, புத்திசாலியா, பேச்சாளனா? எதுவுமே கிடையாது. சரி, பார்ப்பதற்காவது நன்றாக இருக்கிறேனா? அதுவும் இல்லை. ஆனாலும் குருதேவர் தமது பணிகளுக்காக என்னைக் கருவியாகப் பயன்படுத்திக்கொண்டார்.” சுவாமி சிவானந்தரின் பணிவு குறிப்பிடத்தக்க ஒன்று. குருதேவர் மீது அவர் கொண்டிருந்த விசுவாசம், அன்பு, நம்பிக்கை ஆகியவற்றிற்கு ஈடிணை கிடையாது.
ஒருசமயம் சுவாமி சிவானந்தர் சுவாமி கல்யாணானந்தரின் வேண்டுகோளை ஏற்று கங்கலில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்குச் சென்றார். அவர் அங்கே தங்கியிருந்தபோது இமயமலையில் நன்கு பனிபெய்துகொண்டிருந்தது. பனிபடர்ந்த மலைகளைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்த அவர் அப்படியே பழைய ஞாபகங்களுக்குச் சென்றுவிட்டார். அவர் கூறினார்:
“நீண்ட நாட்களாகவே நான் பனிப்பொழிவைப் பார்க்கவில்லை. எனவேதான் என்மீது கருணைகொண்ட சிவபெருமான் தமது வெள்ளைப் பனி உருவைக் காட்டி அருளினார். ஆஹா! எத்தனை பிரம்மாண்டம்! பனி படராதபோது இமயமலை பார்ப்பதற்கு அவ்வளவு நன்றாக இல்லை.”
ஒருநாள் அவர் ஹரித்வார் கங்கைப் பகுதியான பிரம்மகுண்டத்தில் குளித்து துதி செய்தார். அவருக்குப் பழைய நினைவுகள் வரத் தொடங்கின. “அந்தக் காலத்தில் நாங்கள் இங்கே தவம் செய்துகொண்டிருந்தபோது யாருமே அணுக முடியாத வனாந்தரமாக இந்த இடம் அமைந்திருந்தது. மனித நடமாட்டம் என்பதே இங்கே கிடையாது. ஆனால் இப்போது இந்தப் பகுதி சிறிய நகரம்போல் தோற்றமளிக்கிறது. பழங்காலத்தில் இங்கே நிலவிய ஏகாந்தம் இப்போது இல்லை” என்று அவர் கூறினார்.
சுவாமி சிவானந்தர் குருதேவரின் ஜெயந்திவிழாவைக் கொண்டாட பேலூர் மடம் வந்து சேர்ந்தார். அந்த நன்னாளில் அவர் பலருக்கு பிரம்மச்சரிய, சன்னியாச தீட்சை தந்தார். தொடர்ந்த ஞாயிற்றுக் கிழமை அன்று விழாக் கொண்டாட ஏற்பாடாகியிருந்தது. பக்தர்கள் ஏராளம்பேர் அந்த விழாவில் கலந்துகொள்வார்கள் என்று முன்பே தெரியும். ஆனால் முந்தைய நாள் இரவு பலத்த மழை பெய்து, மடத்து சமையலறை வரை தண்ணீர் புகுந்துவிட்டது. இதனால் கவலையடைந்த மூத்த துறவிகள் சுவாமி சிவானந்தரிடம் ஆலோசனை பெறச் சென்றனர்.
சுவாமி சிவானந்தர் அவர்களிடம் எதுவும் பேசாமல் ஜபமாலையை எடுத்துக்கொண்டு கோயிலுக்குப் புறப்பட்டார். சிறிதுநேரம் கழித்து வெளியே வந்த அவர் முகத்தில் தெய்வீக ஒளி வீசியது. அவரது உதடுகள், “இறைவா! எங்களை விஷம் நிறைந்த தண்ணீரிலிருந்தும், காட்டு விலங்குகளிடமிருந்தும், பேய்களிடமிருந்தும், மழை, புயல், மின்னல், எதிரிகளிடமிருந்தும் காத்தருள்வாயாக!” என்ற பாகவத மொழிகளை உச்சரித்தவாறு இருந்தன. பிறகு அவர் உறுதியான குரலில், “பயப்படாமல் சென்று விழா ஏற்பாடுகளைக் கவனியுங்கள். அவருடைய கருணையால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என்று கூறினார். என்ன ஆச்சரியம்! வானத்தை மூடியிருந்த மேகக்கூட்டங்கள் மெதுவாக விலகத் தொடங்கின. அவற்றால் மறைக்கப்பட்டிருந்த சூரியன் மெதுவாகத் தனது கதிர்களைப் பரப்பிக்கொண்டு வெளி வந்தான். விழா நல்லபடியாக நடந்து முடிந்தது.
சுவாமி சிவானந்தர் தலைவராக இருந்தபோது இயக்கம் சிறப்பாக வளர்ச்சியடைந்தது. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இயக்கத்தின் புதிய கிளைகள் ஆரம்பிக்கப்பட்டன. அவர் துறவிகளிடம் பொதுநலப் பணிகளைச் செய்வதோடு அல்லாமல் நான்கு யோகங்களையும் பழகி ஆன்மாவை அடையும் முயற்சியையும் கைவிடலாகாது என்று கூறி அறிவுறுத்தினார். ஒருநாள் அவர் துறவி ஒருவரிடம் பின்வருமாறு பேசினார்:
“ஜபதியானத்தை தினமும் செய்து வா. ஏனெனில் அதுதான் எல்லா ஆற்றல்களின் களஞ்சியமாகும். தியான நேரத்தை எந்தக் காரணத்தை முன்னிட்டும் குறைத்துவிடாதே.”
மற்றொரு நாள் துறவி ஒருவர், வேலை செய்வதைவிட தியானத்திற்குத்தான் அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்பதுபோல் பேசினார். அவருக்கு சுவாமிகள் பின்வருமாறு பதில் கூறினார்: “தியானம் மிகவும் முக்கியமானது. கடந்த காலத்திலும் சரி, நிகழ்காலத்திலும் சரி, எதிர்காலத்திலும் சரி, தியானம் மிகவும் முக்கியமானது. வேலை செய்வதைப்பற்றி பேசினாய். குருதேவரும் சுவாமிஜியும் அளித்துச் சென்றுள்ள லட்சியங்களுக்கு ஏற்பப் பணிகளைச் செய்ய வேண்டுமானால் ஜபமும் தியானமும் கட்டாயம் வேண்டும். ஜபமோ, தியானமோ இல்லாமல் அவர்களின் பணியைச் செய்யமுடியாது என்பதை அறிந்துகொள். வேலை, வழிபாடு இரண்டையும் சமச்சீராகச் செய்ய வேண்டும்.”
1924–ஆம் வருடம் சுவாமி விவேகானந்தர், சுவாமி பிரம்மானந்தர் ஆகியோர்களின் கோயில்கள் கட்டப்பட்டன. அவற்றை அர்ப்பணம் செய்துவிட்டு மீண்டும் தமது தென்னிந்தியப் பயணத்தைத் துவக்கினார் சுவாமிகள். வழியில் அவர் புவனேஸ்வரம், வால்டேர் ஆகிய இடங்களில் தங்கினார். ஒருநாள் பக்தர் ஒருவர் அவரை விருந்திற்கு அழைத்திருந்தார். விருந்து முடிந்தபிறகு எஞ்சிய உணவிற்காக ஏழைகள் பசியுடன் போட்டிபோட்டுக் கொண்டிருப்பதைக் கண்ட சுவாமிகள் அதிர்ந்துபோனார். அவர் அதைப் பொறுக்க முடியாமல் தமது பக்தரிடம் அந்த மக்களுக்குப் பசியாற உணவு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். “ஏழை மக்களை உனது கடவுளாகக் கொள். அவர்களுக்குச் சேவை செய்வதே இந்த யுகத்தின் மதம்” என்று அவர் சுவாமி விவேகானந்தரின் செய்தியை அங்கிருந்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தினார்.
சென்னையில் அவருக்கு மலேரியா நோய் கண்டது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள அவரை குளிர்ச்சியான மலைப் பகுதியில் சென்று தங்குமாறு கூறி மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். சுவாமிகள் நீலகிரி மலையிலுள்ள குன்னூர் என்ற ஊருக்குச் சென்று தங்க ஏற்பாடானது. இங்கும் அவர் பல பக்தர்களுக்கு மந்திர தீட்சை வழங்கினார்.
ஸ்ப்ரிங் ஃபீல்ட் என்ற இடத்தில் தங்கிய சுவாமிகள் நீலகிரி மலையில் ஆசிரமம் ஒன்றை ஏற்படுத்தினால் சாதுக்கள் தியானம் செய்வதற்கு வசதியாக இருக்கும் என்று கருதினார். பிரம்மஞானிகள் எது நினைத்தாலும் அது நிறைவேறுகிறது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. சுவாமிகளின் விருப்பம் எப்படி நிறைவேறியது என்பதை அவரே ஒரு கடிதத்தில் விளக்குகிறார்:
“குருதேவரின் செயல்பாடுகள் அற்புதமானவை! துணி துவைக்கும் தொழிலாளி ஒருவர் இரண்டு ஏக்கர் நிலத்தை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அவருக்குக் கனவு ஒன்று வந்தது. அதில் அவருடைய இஷ்டதெய்வமான மாரியம்மன், ‘மடம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக சிலர் உன்னை அணுகி நில தானம் கேட்பார்கள். அவர்கள் விருப்பப்படியே அதைத் தந்துதவு’ என்று கூறி அருளியுள்ளாள். மூன்று நாட்கள் தொடர்ச்சியாக அதேபோல் கனவு கண்ட அவர் யாரும் தம்மை அணுகவில்லையே என்று காத்திருந்தார். ஒருநாள் சில பக்தர்கள் நிலம் ஒன்றைத் தேடி அலைந்துகொண்டிருப்பதை அவர் பார்த்தார். உடனே அவர், ‘நான் இத்தனை நாட்களாக உங்களைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். என்னிடம் உள்ள இருபத்தி இரண்டு ஏக்கர் நிலத்தில் இரண்டு ஏக்கரை உங்களுக்குத் தானமாக வழங்குகிறேன். தயவுசெய்து பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று கூறினார்.” வெகு சிக்கிரமே அங்கு மடம் ஒன்றைத் தோற்றுவிக்க எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.1
சுவாமிகள் பெங்களூர், நாட்றம்பள்ளி, கடப்பா ஆகிய ஊர்களுக்குச் சென்றார். கடப்பாவில் அவர் தாம் கண்ட இஸ்லாமிய பக்தர் ஒருவரைப் பற்றிக் கடிதம் ஒன்றில் புகழ்ந்து எழுதியுள்ளார். அந்த இஸ்லாமிய பக்தர் ஆங்கிலேய அரசாங்கத்திடம் கான்பகதூர் என்ற பட்டத்தை வாங்கியவர். அவர் குருதேவர் மீது அதிக பக்தி உடையவராகவும், முகமது நபியே இம்முறை உலகத்தை மேன்மை பெறச் செய்ய குருதேவராக அவதரித்துள்ளதாகவும் நம்பினார் என்றும் சுவாமிகள் அதில் குறிப்பிட்டுள்ளார். தென்னிந்தியப் பயணத்தை முடித்துக்கொண்டு சுவாமிகள் பம்பாய், நாக்பூர் ஆகிய இடங்களுக்கெல்லாம் சென்றார். அங்கும் பல பக்தர்களுக்கு மந்திர தீட்சை வழங்கினார்.
சுவாமிகள் ராமகிருஷ்ண இயக்கத்தைப் பற்றி மிக உயர்வான கருத்தைக் கொண்டிருந்தார். அவர் ஒருமுறை துறவிகளிடம் பின்வருமாறு கூறினார்:
“வேலைகள் பந்தத்தை ஏற்படுத்துவது உண்மைதான். ஆனால் குருதேவர், அன்னை, சுவாமிஜி ஆகிய மூவரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த இயக்கம் வித்தியாசமானது. ஆன்மீக சாதனைகள் செய்யவும், துறவு, தவம் ஆகியவற்றை மேற்கொள்ள மட்டும் இந்த இயக்கம் ஆரம்பிக்கப்படவில்லை. யுக தர்மத்தை நிறுவுகின்ற முக்கியமான பணியைக் கைக்கொண்டுள்ளது இந்த இயக்கம். இங்கே எல்லோரும் தியானத்துடன் வேலையும் செய்ய வேண்டும். குருதேவரின் சீடர்களான எங்களுடைய வழிகாட்டுதலின்படி வேலை செய்கின்ற யாரும் பந்தத்திற்கு உள்ளாக மாட்டார்கள். அவர்களின் பொறுப்பை குருதேவரே ஏற்றுக்கொள்வார்.”
சுவாமி சிவானந்தர் இதுபற்றி துறவி ஒருவருக்கு எழுதியது:
“இறைவன் உனக்கு குறையாத உற்சாகத்தையும் விடாமுயற்சியையும் தரட்டும்! மடம் வளரவே செய்யும். அது நிச்சயம். அதைப்பற்றி நீ கவலைப்படாதே. வேலை செய்வதுபற்றி சுவாமி விவேகானந்தர் கூறியதை ஒருபோதும் மறக்காதே. மடம் சம்பந்தமான பணிகளைச் செய்வதும், தேச சேவையும் எந்த வகையிலும் ஆன்மீக சாதனைகளைவிடத் தாழ்ந்தவை அல்ல. நீ செய்கின்ற அனைத்தும், ஏன், ஜப தியானம்கூட அவருடைய வேலைதான். இதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். குருதேவரின் திருநாமத்தைச் சொல்வதும், அவரைத் தியானிப்பதும் எப்படி ஆன்மீக சாதனைகளோ, அப்படியே, மனிதகுலச் சேவை சுயநலம்இல்லாமல் செய்யப்படும்போது ஓர் ஆன்மீக சாதனை ஆகிறது. சேவை செய்வதில் வாழ்க்கையை வீணாக்கிவிட்டதாக ஒருவேளை நீ கருதுவாயானால் அது தவறு; அர்த்தமற்றது. ஒரு வழியில்தான் ஆன்மீக சாதனை செய்ய முடியும் என்று கிடையாது; பல வழிகளில் செய்யலாம். சுருக்கமாகச் சொல்வதானால், அகங்காரத்தைத் துறப்பதுதான் ஆன்மீக சாதனை.”
1926–ஆம் ஆண்டு சுவாமி சிவானந்தர் பீகார் மாநிலத்தில் தேவ்கரில் அமைந்துள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாபீடத்திற்குச் சென்றார். அங்கேயுள்ள குளிர்ச்சியான காலநிலை காரணமாக ஆஸ்துமா வியாதி அவரைத் தாக்கியது. பிரசித்தி பெற்ற சிவன் கோயில் ஒன்று அங்கே உள்ளது. ஒருநாள் சுவாமிகள் அந்தக் கோயிலுக்குச் சென்று சிவனை வழிபட்டார். அன்று அவருக்கு முக்கியமான ஆன்மீக அனுபவம் ஒன்று கிடைத்தது. உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதிலும் அவர் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பக்தர்களிடம் மகிழ்ச்சியாகப் பகிர்ந்துகொண்டார்:
“நேற்றிரவு நான் மிகவும் கஷ்டப்பட்டேன். பயங்கரமான மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ஆஸ்துமா வியாதியினால் எனது மூக்கைச் சளி அடைத்துக்கொண்டது. இதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். புலன்கள் அனைத்தும் வலிமையை இழந்து உயிரானது உடலைவிட்டு நீங்குவதுபோல எனக்குத் தோன்றியது. நான் உடனே தியானம் செய்யத் தொடங்கினேன். உடனே எனது மனம் அதில் முற்றிலும் ஆழ்ந்துவிட்டது. நோயின் வலி முற்றிலும் குறைந்து என் மனம் அமைதியுற்றதை உணர்ந்தேன். வெளி உலகத்தின் துன்பங்களும், துயர்களும் நெருங்க முடியாத இடத்திற்கு என் மனம் சென்றுவிட்டது. சிறிதுநேரம் அந்த இடத்திலேயே சஞ்சரித்துக்கொண்டிருந்த என் மனம் மெதுவாக புறஉலக நினைவைப் பெற்றது.”
இதைக் கேட்ட துறவி ஒருவர் ஆர்வமுடன் சுவாமிகளிடம், “நீங்கள் அனுபவித்ததைப் பற்றிச் சொல்ல முடியுமா?” என்று கேட்டார். உடனே சிவானந்தர், “நான் ஆன்ம அனுபவம் பெற்றேன்” என்று பதில் சொன்னார்.
1926–ஆம் ஆண்டு பேலூர் மடத்தில் நடைபெற்ற ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் முதலாவது மாநாட்டில் சுவாமிகள் கலந்துகொண்டு உரையாற்றினார். மாநாட்டுத் தலைவரான அவரது உரையானது பக்தர்கள் மற்றும் துறவிகளின் பாராட்டைப் பெற்றது. அவரது உரையின் முக்கியமான பகுதிகளை இங்கே தொகுத்து அளிக்கிறோம்:
“அன்பு, பரந்த மனப்பான்மை, தூய்மை, சுயநலமின்மை ஆகியவைதான் இயக்கத்தின் அடிப்படைகளாகும். சுயநலம் தலைதூக்கி மடத்தின் உயிர்ப்பகுதியை அரிக்க ஆரம்பித்துவிட்டால் மனிதர்கள் போடும் சட்டங்களால் எந்தப் பயனும் இல்லை. நீங்கள் ஒவ்வொருவரும் நிறைநிலையை அடைய முயற்சி செய்ய வேண்டும். அதனுடன் மடத்திற்கு உங்கள் கடப்பாட்டையும் ஒருபோதும் மறக்கக் கூடாது. ஏனெனில் நீங்கள் நிறைநிலையை அடைவதற்குத் தேவையான அனைத்தையும் இந்த மடம்தான் உங்களுக்குத் தந்துள்ளது. இப்படி உங்களால் வாழ முடியுமானால், நீங்கள் மடத்தின் வளர்ச்சிக்காக ஒரு கல்லை வைத்துவிட்டீர்கள். சுவாமி விவேகானந்தர் இந்த மடத்திற்காகத் தமது ரத்தத்தைச் சிந்தினார். அவர் இன்னும் நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கிறார். இந்த மடம் குருதேவரின் தூல உடல் ஆகும். இறையருளாகிய காற்று இடைவிடாமல் வீசிக்கொண்டிருக்கிறது. நாம் பாய்மரத்தை விரித்தால் போதும், அந்தக் காற்று நம்மை நமது லட்சியத்தில் சேர்த்துவிடும்.
“இறைவன்மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்குமானால், ‘நான் இந்த உலகத்தையே அசைப்பேன்’ என்று உங்களால் கூற முடியும். தற்காலிகத் தோல்விகளால் மன உறுதியை இழக்காதீர்கள். தோல்விகள் வெற்றிக்கான படிகள். வெற்றி, தோல்விகளைச் சமமாகக் கருதி, கடவுள்மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து வேலை செய்து கொண்டே போனால், கடைசியில் வெற்றி உங்களுடையது ஆகும்.
“பரிபூரணமாகச் சரணடைந்து வாழுங்கள். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக இருங்கள். கொல்லன் கையில் உள்ள சுத்தியலாக இருங்கள். எதையும் கிழித்தெறியும் வாளாக இருங்கள். குறிதவறியதற்காக அம்பு ஒருநாளும் முணுமுணுக்காது. தவறான இடத்தில் விழுந்ததற்காக சுத்தியல் என்றும் வருந்தியதில்லை. வீரனின் கையில் உடைந்தால் வாள் அதற்காகக் கண்ணீர் சிந்தாது. ஏனெனில் இறைவனின் கையில் கருவியாக இருப்பதிலும், அவருடைய பணிகளுக்காக உபயோகப்படுவதிலும், அதிலேயே உடைந்து நொறுங்குவதிலும் ஒரு மகிழ்ச்சி இருக்கவே செய்கிறது.
“உங்களுக்கு வலிமையும் விடாமுயற்சியும் தந்து, இந்தப் பிறவியிலேயே உண்மையைக் கண்டறியத் துணை புரிய வேண்டுமென்று குருதேவரிடம் நான் பிரார்த்திக்கிறேன்.”
மனித வாழ்வில் நாம் சந்திக்கும் பெரும்பாலான பிரச்சினைகள் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதில் ஏற்படும் தவறாலும், மன உணர்ச்சிகளை வெளிப்படுத்தத் தெரியாமலும் ஏற்படுவதுதான். பல்வேறு மன நிலைகளைக் கொண்ட மனிதர்கள் ஒன்றுகூடி வேலை செய்யும்போது எத்தனையோ முரண்பாடான கருத்துக்கள் தோன்றுவது இயற்கை. இல்லறத்தில் காணப்படுகின்ற இதே பிரச்சினை மடங்களிலும் இருக்கத்தான் செய்கிறது. இதுபற்றி சுவாமி சிவானந்தர் ஒருமுறை துறவிகளுக்குக் கூறினார்:
“ஒரு துளி நீரில் பெரிய கடலையே பார்க்க வேண்டுமென்று குருதேவர் கூறுவார். இவை வெறும் வார்த்தைகள் அல்ல; அவரது அனுபவம். எங்களிடம் உள்ள தவறுகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் குருதேவர் தம்முடன் வாழும் பேற்றினை எங்களுக்கு அளித்தார். தவறுகள் இல்லாத மனிதன்தான் யார்? மடத்தில் வாழும் எல்லோருக்கும் நோக்கம் ஒன்றே. அது, குறைகள் அற்றவர்களாவது. வரும்போதே குறைகள் அற்றவர்களாக யாரும் இங்கே வரவில்லை. அவருடைய அருளால் எல்லா குறைகளும் காலப்போக்கில் மறைந்துவிடுவது உறுதி. குருதேவரின் காலடியில் சரணந்துவிட்டால், அவரே எல்லாவற்றையும் சரிசெய்வார்.”
1926–ஆம் ஆண்டு சுவாமிகள் மீண்டும் தென்னிந்தியாவிற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். சென்னை, ஊட்டி ஆகிய இடங்களில் தங்கினார். ஊட்டியில் இருந்தபோது அருமையான ஆன்மீக அனுபவம் ஒன்றைப் பெற்றார். அதைப் பற்றி அவரே கூறுகிறார்:
“நீண்ட நெடிய நீலமலைத் தொடர்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒளிமயமான உருவம் ஒன்று என் உடலைவிட்டு வெளி வந்து பெரிதாக வளர ஆரம்பித்தது. கடைசியில் அது இந்தப் பிரபஞ்சத்தையே நிறைக்கும் அளவிற்குப் பெரிதானது. குருதேவரே எனது பரமாத்மா. அவர்தான் இந்த உலகம் முழுவதும் நிறைந்துள்ளார்.”
1926 செப்டம்பரில் சுவாமிகள் ஊட்டி ராமகிருஷ்ண ஆசிரமத்தைத் திறந்து வைத்தார். ஐந்து மாதங்கள் ஊட்டியில் கழித்தபிறகு சுவாமிகள் பெங்களூர், சென்னை, நாட்டறம் பள்ளி ஆகிய ஊர்களுக்குச் சென்றார். பிறகு அவர் மும்பாய், நாக்பூர் சென்றுவிட்டு 1927–இல் பேலூர் மடம் சென்று சேர்ந்தார்.
சுவாமிகளின் உடல்நிலை சீர்குலையத் தொடங்கியது. ஆஸ்துமாவோடு ரத்த அழுத்த நோயும் சேர்ந்துகொண்டது. சுவாமிகள் நிறையவே கஷ்டப்பட்டார். ஆனால் அவருக்கு ஓய்வு மட்டும் கிடைக்கவே இல்லை. தினமும் பக்தர்களுக்கு மந்திர தீட்சை வழங்குவது, துறவிகளுக்கு ஆலோசனை வழங்குவது, மடத்திலுள்ள மற்றவர்களால் கையாள முடியாத பிரச்சினைகளைக் கையாள்வது என்று இடைவிடாமல் உழைத்தார்.
1927-இல் சுவாமி சாரதானந்தர் மகாசமாதி அடைந்தார். சகோதரச் சீடரின் ஈடு செய்ய முடியாத இழப்பை எண்ணி மனம் வருந்தியதால் சுவாமிகளின் உடல்நிலை மேலும் சீர்கெட்டது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் பீஹாரில் உள்ள மதுபூரில் உள்ள அமைதியான ஓய்வில்லம் ஒன்றில் சிறிதுகாலம் தங்கினார். இதனால் அவருடைய உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது.
சுவாமிகள் 1927 நவம்பரில் வாரணாசிக்குச் சென்றார். அங்கே அவர் எந்த நேரமும் பரவசநிலையிலேயே இருந்தார். ஒருநாள் காலையில் அவர் உதவியாளர்களாக இருந்த துறவிகளிடம் தமது ஆன்மீக அனுபவத்தைக் கூறினார்:
“நேற்றிரவு எனக்கு அற்புதமான அனுபவம் ஒன்று கிடைத்தது. நடுஇரவில் வெண்ணிற தெய்வீக புருஷர் ஒருவர் ஒளிமயமாக என்முன் தோன்றினார். ஜடை முடியும் மூன்று கண்களும் உடையவராக இருந்தார் அவர். அவரது திருமேனியிலிருந்து வெளிப்பட்ட ஒளி அந்த இடத்தையே பிரகாசப்படுத்தியது. ஆஹா! என்ன அசாதாரணமான அழகும் கருணையும் அன்பும் பொலியும் முகம்! இந்தக் காட்சியால் எனது குண்டலினி சக்தி விழிப்புற்று மேலே கிளம்பியது. நான் இறையானந்தத்தில் மூழ்கினேன். நான் பார்த்துக்கொண்டிருந்தபோதே அவர் மறைந்து அங்கே குருதேவர் புன்னகை புரிந்தபடியே நின்றுகொண்டிருந்தார். என்னைப் பார்த்து அவர், ‘நீ இன்னும் கொஞ்சகாலம் பொறுத்திருக்க வேண்டும். உன்மூலமாக இன்னும் சில வேலைகள் நடைபெற உள்ளன’ என்று கூறினார். குருதேவரின் வார்த்தைகளைக் கேட்டவுடனேயே என் மனமானது கீழிறங்கி உடல் உணர்வைப் பெற்று வழக்கம்போல் இயங்க ஆரம்பித்தது. எல்லாம் அவரது திருவுளம். நான் ஆனந்தத்தில் நிலைபெற்றிருந்தேன். குருதேவர் வேறு யாரும் அல்ல, அந்த விசுவநாதரேதான்.”
இதைக் கேட்ட துறவி ஒருவர் ஆவலுடன் சுவாமிகளைப் பார்த்து, “இதை நீங்கள் கனவில் பார்த்தீர்களா அல்லது நேரில் பார்த்தீர்களா?” என்று கேட்டார். சுவாமிகள் இதற்கு அமைதியாக, “அப்போது நான் விழித்திருந்தேன்” என்று பதில் கூறினார்.
சுவாமி சிவானந்தர் ராமகிருஷ்ண இயக்கத்தைத் தமது ஆன்மீக ஆற்றலால் வழிநடத்தினார். பிரம்மச்சாரி ஒருவர் வேலை செய்வதைத் தவிர்த்துவந்தார். பிறகு தனது தவறை உணர்ந்த அவர் சுவாமிகளிடம் சென்று மன்னிப்புக் கேட்டார். அதனால் மகிழ்ச்சியடைந்த சுவாமிகள் கருணை பொங்க, “நல்லது. நாங்கள் சொல்வதை அப்படியே கேட்டு நடந்தால் உனக்கு நன்மைகள் உண்டாகும். நாங்கள் எது சொன்னாலும் அவையெல்லாம் குருதேவரிடமிருந்து நேரடியாக வருபவை. இப்போதெல்லாம் நான் குருதேவருடன் முழுமையாக ஒன்றியுள்ளேன்” என்று கூறினார்.
1922–ஆம் ஆண்டிலிருந்து சுவாமிகள் பக்தர்களுக்கு மந்திர தீட்சை வழங்க ஆரம்பித்தார். அவர் தம்மை ஒரு குருவாக ஒருபோதும் கருதியதில்லை. வாரணாசியில் இருந்தபோது ஒருநாள் அவர் துறவி ஒருவரிடம் பின்வருமாறு கூறினார்: “குரு என்ற எண்ணத்தை குருதேவர் என் மனத்திலிருந்து முற்றிலுமாக நீக்கிவிட்டார். சிவன் ஒருவரே உண்மையான குரு. இந்த யுகத்திற்கு ஸ்ரீராமகிருஷ்ணரே குரு. அவர்தான் பக்தர்களை இங்கே வரவழைக்கிறார். அவர் உள்ளிருந்து கூறுவதையே நான் பக்தர்களிடம் தெரிவிக்கிறேன். குருதேவர் எனது ஆன்மாவிற்கு ஆன்மாவாய் விளங்குகிறார்.”
1928 ஜனவரி 15–ஆம் தேதி ஜவஹர்லால் நேரு வாரணாசியிலுள்ள ராமகிருஷ்ண சேவாஸ்ரமத்திற்கு வந்தார். அவர் சுவாமி சிவானந்தரைச் சந்தித்துப் பேசினார். சில நாட்கள் கழித்து நேருவின் மனைவி கமலா நேருவும் சுவாமிகளைச் சந்தித்து அவருடைய ஆசிகளைப் பெற்றுக்கொண்டார். சுவாமிகளால் மனம் கவரப்பட்ட நேருவின் மனைவி பிற்காலத்தில் பலமுறை பேலூர் மடத்திற்கு வந்து சுவாமிகளிடம் ஆன்மீக அறிவுரைகளைப் பெற்றுப் பயனடைந்தார். நேருவின் குடும்பத்தினர் அனைவரும் ராமகிருஷ்ண இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தனர்.
ஒருமுறை மூத்தத் துறவி ஒருவர் சுவாமிகளை அணுகி மற்றொரு துறவியின்மீது சில புகார்களைச் சொல்லி நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினார். சுவாமிகள் அந்த துறவி பேசிய அனைத்தையும் பொறுமையுடன் கேட்டார். பிறகு அவர், “நீ புகார் சொல்லும் துறவியிடம் ஏதேனும் நல்ல குணங்கள் இருக்கின்றனவா?” என்று கேட்டார். உடனே அந்தத் துறவி தான் புகார் கூறிய துறவியிடம் இருந்த நல்ல குணங்கள் சிலவற்றை சுவாமிகளிடம் எடுத்துக் கூறினார். அதைக் கேட்ட சுவாமிகளின் முகத்தில் சந்தோஷம் பொங்கி வழிந்தது. “அதுவே போதுமானது!” என்று அவர் மகிழ்ச்சியாகக் கூறினார். புகார் கூறப்பட்ட துறவி வெளியேற்றப்படவில்லை.
மற்றொரு முறை சுவாமிகள் துறவிகளிடம், “வெறுமனே பேசுவதாலோ, வற்புறுத்துவதாலோ மக்களிடம் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. உண்மையிலேயே உங்களிடம் ஆன்மீக ஆற்றல் இருக்குமானால், அதைக் கொண்டு அவர்களுடைய மனப்போக்கை மாற்றி நல்ல பாதைக்குத் திருப்ப முயற்சி செய்யுங்கள். இறைவனிடம் இடைவிடாமல் பிரார்த்தனை செய்யுங்கள்; அவரிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவரே வேண்டிய மாற்றங்களைச் செய்யட்டும். இறைவன் மட்டும் தமது கருணையைப் பொழிய ஆரம்பித்துவிட்டால் எவ்வளவு பெரிய தீமையும் அகற்றப்பட்டு மனத்தில் பெரிய மாற்றம் ஏற்படுவது உறுதி.”
பேலூர் மடத்தில் குருதேவருக்கு ஒரு கோயில் கட்ட சுவாமிஜி பெரிதும் விரும்பினார். ஆனால் அவரது காலத்தில் அது நடைபெறவில்லை. அவரது திட்டப்படி சுவாமி விஞ்ஞானானந்தர் வரைபடம் தயார் செய்தார். சுவாமிஜி அதைப் பார்த்துவிட்டு, ‘எதிர்காலத்தில் திருக்கோயில் பணி நிறைவுறும்போது நான் மேலிருந்து காண்பேன்’ என்று கூறினார். அவ்வாறே கோயில் பணி தொடங்கியது. 1929 மார்ச் 13-ஆம் தேதி ஸ்ரீராமகிருஷ்ண ஜெயந்தி நாளன்று சுவாமி சிவானந்தர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டினார்.
சில பரிமாணங்கள்
சுவாமி சிவானந்தர் இறைவனுடைய ஆணையைப் பெற்ற ஆன்மீக குரு ஆவார். போதித்ததை அவர் வாழ்ந்து காட்டினார். நூற்றுக்கணக்கான மக்களுக்கு முன்பு நின்றுகொண்டு பெரிய சொற்பொழிவு எதையும் அவர் நிகழ்த்தவில்லை. ஆனால் இறைவனை நாடியவர்களுக்குத் தம்மிடமிருந்த ஆன்மீகப் பொக்கிஷங்களை வாரி வழங்கினார்; சொந்த அனுபவத்தைக் கொண்டு அவர்களின் சந்தேகங்களைப் போக்கினார். ஒருமுறை அவர் தமது ஆன்மீக அனுபூதியைப்பற்றிக் குறிப்பிட்டார்: “குருதேவரின் அருளால் நான் அந்த எல்லையில்லாத சச்சிதானந்தத்தை அனுபூதியில் உணர்ந்துகொண்டேன்.”
ஒருநாள் சுவாமி கமலேஷ்வரானந்தர் சுவாமிகளிடம், “நான் உங்களிடம் உபநிஷதங்களைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்” என்று கேட்டார். சுவாமிகள் அவரிடம், “நீ எங்களுடைய வாழ்க்கையைப் படித்துப் பார். அவை உபநிஷதங்களே தவிர வேறில்லை. உபநிஷதங்களின் சாரத்தை எங்கள் வாழ்க்கையில் காண்பாய். குருதேவரிடமிருந்து எந்த ஆன்ம ஒளியை நான் பெற்றுக்கொண்டேனோ அதைத்தான் உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்கிறேன். ஒரு தீபம் மற்றொரு தீபத்திற்கு ஒளி தருகிறது. இந்த வகையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம்” என்றார்.
சுவாமிகள் தமது சீடர்களுடைய ஆன்மீக வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும், சாஸ்திரங்களைப் புரிந்துகொள்வதில் அவர்களுக்கு இருந்த இடையூறுகளையும் தமது அனுபவத்தால் தீர்த்து வைத்தார். சுவாமி நிகிலானந்தர் பின்வருமாறு எழுதுகிறார்:
“நான் ஒருமுறை சுவாமிகளிடம் எல்லோரும் வழக்கமாகக் கேட்கும் கேள்வியைக் கேட்டேன்.
“நான்: ‘குருதேவரிடம் சரணடைந்தவர்களுக்கு இதுவே கடைசிப் பிறவி என்று சொல்கிறார்களே, அதைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.’
“சுவாமிகள்: ‘நானும் அதை நம்புகிறேன்.’
“நான்: ‘ஆசைகளை வென்றவர் மட்டுமே மறுபடியும் பிறப்பதில்லை; நிர்விகல்ப சமாதியை அடைந்து பிரம்ம அனுபூதி பெற்றவரால் மட்டுமே அவ்வாறு ஆசைகளை வெல்ல முடியும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றனவே!’
“சுவாமிகள்: ‘நான் பண்டிதன் அல்ல. சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன என்பதும் எனக்குத் தெரியாது. ஆனால் மறுபிறவிக்குக் காரணம் என்ன? நிறைவேறாத ஆசைகள்தானே?’
“நான் : ஆம்.’
“சுவாமிகள்: ‘நீ மரணப் படுக்கையில் இருக்கும்போது குருதேவர் உன்முன் தோன்றி இந்த உலகில் மீண்டும் பிறந்து எதையாவது அனுபவிக்க விரும்புகிறாயா என்று கேட்டால் நீ என்ன பதில் சொல்வாய்?’
“நான்: ‘மீண்டும் பிறந்து அனுபவிப்பதற்கு என்னிடம் எந்த ஆசையும் இல்லை என்பேன்.’
“சுவாமிகள்: ‘அப்படி என்றால் இதுதானே உனக்குக் கடைசிப் பிறவி! குருதேவரின் அருளால் இந்த ஆசையின்மை பிறக்கும்.’ ”
ஆன்ம தரிசனம் பெற்ற குரு தீய நடத்தை உடையவர்களைக்கூட நல்லவர்களாக மாற்றிவிடுவார். ஒருநாள் காலையில் சுவாமி சிவானந்தர் தமது அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். ஆழ்ந்த சிந்தனையுடன் தனக்குள்தானே மூழ்கியிருந்த அவர் திடீரென்று அருகில் நின்றுகொண்டிருந்த உதவியாளரை அழைத்து, “மந்திர தீட்சைக்காக யாராவது வெளியில் நின்றுகொண்டிருக்கிறார்களா, பார்” என்று கூறினார். உதவியாளர் வந்து பார்த்தபோது, அங்கே இளம் பெண் ஒருத்தி காத்து நிற்பதை அவர் கண்டார். அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோது அவர் தனது வழிதவறிய கடந்த காலத்தைப் பற்றிக் கூறினாள். தற்போது தவறுகளைத் திருத்திக்கொண்டு நல்லவளாக வாழ விரும்புவதாகவும், முடிந்தால் சுவாமிகளைப் பார்க்கும் ஆவலுடன் வந்திருப்பதாகவும் கூறினாள்.
இந்த விஷயத்தை சுவாமிகளிடம் சொல்லவா வேண்டாமா என்று எண்ணிக் குழம்பிப்போன உதவியாளரான அந்தத் துறவி நேராக மாடிக்குச் சென்றார். சுவாமிகள் அவரிடம் மென்மையான குரலில், “என்ன, யாராவது காத்திருக்கிறார்களா?” என்று கேட்டார். துறவி சுவாமிகளிடம், “மகராஜ், இளம் பெண் ஒருத்தி உங்களிடம் மந்திர தீட்சை பெற்றுக்கொள்ள விரும்புகிறாள். ஆனால்....” என்று முழு விஷயத்தையும் சொல்லாமல் தயங்கி நின்றார். உதவியாளர் பேசி முடிப்பதற்குள் சுவாமிகள், “அதனால் என்ன? அவளிடம் கங்கையில் குளித்துவிட்டு, கோயிலுக்குப் போய் குருதேவரை தரிசித்த பிறகு என்னை வந்து பார்க்கச் சொல். வழி தவறியவர்களைக் கைதூக்கிவிடவே குருதேவர் அவதரித்துள்ளார். அவர் மட்டும் வரவில்லை என்றால் இவர்களுடைய கதிதான் என்ன?” என்று கூறினார். அவர் ‘வழி தவறியவர்களின் ரட்சகர்’ என்று புகழ்ந்து கூறுகிறோமே அதற்கும் அர்த்தமில்லாமல் போய்விடும்.
சிறிதுநேரம் கழித்து அந்தப் பெண் சுவாமிகளிடம் வந்தாள். அவர் அந்தப் பெண்ணைப் பார்த்து, “இதில் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது மகளே? நம் குருதேவரும், ரட்சகருமான ஸ்ரீராமகிருஷ்ணரின் பாதங்களைச் சரணடைந்துவிட்டதால் நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் ஆகிறாய். ‘இந்தப் பிறவியிலும், முற்பிறவிகளிலும் நான் செய்த பாவங்கள் அனைத்தையும் உங்கள் (குருதேவரின்) காலடியில் சமர்ப்பித்துவிடுகிறேன். இனிமேல் பாவச் செயல்களில் ஈடுபட மாட்டேன்’ என்று சொல். மந்திர தீட்சை பெற்றுக்கொண்ட பிறகு அந்தப் பெண்ணின் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது.
ஒருசமயம் சுவாமிகள் பின்வருமாறு கூறினார்: “நான் ஏன் நோய்களாலும், உடல் உபாதைகளாலும் அவதிப்படுகிறேன் தெரியுமா? பிறருடைய பாவங்களை ஏற்றுக்கொண்டதால்தான். இல்லையென்றால் எனக்கு ஏன் இவ்வளவு கஷ்டம் வரப்போகிறது?”
நோயுற்றதாலும், வயதாகிவிட்டதாலும் சுவாமிகளால் கடைசிக்காலத்தில் பயணம் எதுவும் செய்ய முடியவில்லை. இருந்தாலும் நாடெங்கிலும் இருந்து வந்த பக்தர்கள் அவரைத் தரிசித்து அவரது ஆசிகளைப் பெற்றுச் சென்றனர். சுவாமிகளிடம் தீட்சை பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அவர்களுடைய பெயர்களையெல்லாம் அவரால் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. சுவாமிகள் ஒருநாள் நீண்ட நேரம் தியானம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்த உதவியாளர், “ஏன் இவ்வளவு நேரம் தியானம் செய்கிறீர்கள்? அதற்கான தேவை என்ன வந்தது?” என்று கேட்டார். சுவாமிகள் அதற்கு, “எனக்காக தியானம் செய்யவில்லை மகனே. நான் எத்தனையோ பேருக்கு மந்திர தீட்சை அளித்துள்ளேன். ஆனால் எல்லோரும் ஒழுங்காக ஜபதியானம் செய்வதில்லை. ஏதோ சில பேர் கொஞ்சம் முயற்சி செய்து சிறிதளவு முன்னேறுகிறார்கள். தியான வேளையில் எனக்கு சீடர்களின் முகங்கள் நினைவிற்கு வரும். நான் உடனே அவர்களுக்கு ஏற்பட்டுள்ள எல்லாத் தடைகளும் நீங்கி ஆன்மீகப் பாதையில் முன்னேற குருதேவரிடம் பிரார்த்தனை செய்வேன்” என்று கூறினார்.
பளிங்கர் அரசி ஒருநாள் சுவாமிகளைக் காண வந்திருந்தாள். சுவாமிகளின் முன்பு விழுந்து வணங்கிய அவருடைய கண்களில் கண்ணீர் பளிச்சிட்டது. தழுதழுத்த குரலில் அவர், “என்போன்ற பக்தைகள் நிறையபேர் உங்களுக்குக் கிடைப்பார்கள். ஆனால் உங்களைப் போன்று யாரும் எனக்குக் கிடைக்க மாட்டார்கள்” என்று கூறினார். அவரது வார்த்தைகள் பக்திமேலீட்டால் ராதை ஸ்ரீகிருஷ்ணரிடம் கூறிய வார்த்தைகளை ஒத்திருந்தன.
பாலி என்ற ஊரைச் சேர்ந்த பூர்ணஹல்தார் என்ற வயதான மீனவர் ஒருவர் இருந்தார். அவர் மடத்தை ஒட்டியிருந்த படித்துறையில் அமர்ந்து கங்கையில் மீன் பிடிப்பார். வயதாகிவிட்டதால் அவரால் அதிகம் முயற்சி செய்து அதிகமாக மீன்களைப் பிடிக்க முடியவில்லை. அப்படிப் பிடித்த கொஞ்ச மீன்களை விற்றால் ஏதோ வீட்டிலுள்ள அனைவரும் ஒருவேளை வயிறார சாப்பிட்டுக் கொள்ளலாம் என்ற நிலைமைதான் இருந்தது. தினமும் சுவாமிகள் மாடியிலுள்ள தமது அறையிலிருந்து அந்த மனிதரைப் பார்த்துக்கொண்டிருப்பார். அவருடைய உள்ளம் அந்த ஏழைக்காக வருந்தியது. அந்த மீனவருக்கு உதவ நினைத்தார் சுவாமிகள். சமையல் அறையைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பில் இருந்த துறவியை அழைத்து அந்த மீனவர் பிடிக்கின்ற எல்லா மீன்களையும் நல்ல விலைகொடுத்து வாங்கிக்கொள்ளுமாறு உத்தரவிட்டார். அது மட்டுமல்லாமல் அவர் அவ்வப்போது தமக்குக் கிடைக்கும் துணிமணிகளையும் அந்த மீனவருக்குத் தந்து உதவுவார். அது மட்டுமல்ல; அந்த மீனவர் இறந்த பிறகு இறுதிக் கிரியைக்கான பணத்தை அளித்ததுடன், அவருடைய விதவை மனைவிக்கு சுவாமிகள் தம்மால் முடிந்த அளவு பணத்தைத் தவறாமல் அனுப்பியும் வந்தார்.
சுவாமிகளின் கருணைக்கு எல்லையே கிடையாது. பசியால் வாடுவோரைக் கண்டால் அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யாமல் அவர் ஓயமாட்டார். ஒருநாள் மதிய உணவிற்குப் பிறகு சுவாமிகள் நடந்துகொண்டிருந்தார். அப்போது அங்கே வேலை செய்துகொண்டிருந்த செருப்புத் தைக்கும் தொழிலாளி பசியுடன் இருப்பதைக் கவனித்துவிட்டார் அவர். உடனே தமது உதவியாளரை அழைத்து, “நாம் எல்லாம் வயிறார உண்டுவிட்டோம். ஆனால் இந்த மனிதனைப் பார். வயிற்றுப் பசியால் துடித்துக் கொண்டிருக்கிறான். தயவுசெய்து அவனை அழைத்துக்கொண்டு போய் வயிறு நிறைய உணவும், குருதேவருக்குப் படைத்த பழங்களையும் கொடு” என்றார். சிறிது நேரம் கழித்து யாரோ ஒருவர் அந்த செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் பேரம் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த சுவாமிகள் கொஞ்சம் கோபமாக, “அவனோ ஏழை. அவன் கேட்ட பணத்தைக் கொடுப்பதுதானே! அதைவிட்டு பேரம் பேசிக்கொண்டிருக்கிறாயே” என்று கூறினார்.
சுவாமி விவேகானந்தரின் அமெரிக்கச் சிஷ்யையான ஜோசஃபைன் மெக்லவுட் பேலூர் மடத்திலுள்ள விருந்தினர் அறையில் தங்கியிருந்தார். ஒருநாள் இரவு திருடன் ஒருவன் எப்படியோ அந்த அறைக்குள் நுழைந்துவிட்டான். அவன் அந்த அறையிலிருந்த லாக்கெட் ஒன்றை எடுத்துக் கொண்டிருந்தபோது ஜோசஃபைன் விழித்துவிட்டார். சுவாமிஜியின் முடி வைக்கப்பட்ட நினைவுச்சின்னம் அது. அதனைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வந்தார் ஜோசஃபைன். அதனை இழக்க விரும்பாத அவர் சத்தம்போட ஆரம்பித்துவிட்டார். அவரது சத்தத்தைக் கேட்டு சுவாமி புண்யானந்தரும் இன்னும் சிலரும் அங்கே ஓடி வந்தனர். அவர்கள் திருடனைப் பிடித்துக் கயிற்றால் கட்டிப்போட்டனர். அவனிடமிருந்து லாக்கெட்டை மீட்டனர்.
அந்த நேரத்தில் அங்கே வந்த சுவாமி சிவானந்தர் கைகள் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருந்த திருடனைப் பார்த்தார். என்ன நடந்தது என்பதை விசாரித்துத் தெரிந்துகொண்டார். ஆனால் ஒன்றும் சொல்லாமல் தமது அறைக்குச் சென்றுவிட்ட அவர் காலை உணவை உண்ணத் தொடங்கினார். அப்போது அறைக்குள் நுழைந்த ஜோசஃபைன் சுவாமிகளிடம், “மகராஜ், எனது அறைக்குள் இன்று ஒரு திருடன் நுழைந்துவிட்டான். அவன் சுவாமி விவேகானந்தரின் பக்தனாக இருக்க வேண்டும். அதனால்தான் அறையில் வேறு எவ்வளவோ பொருட்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் எடுக்காமல் சுவாமிஜியின் தலை முடி உள்ள லாக்கெட்டைத் திருடினான்” என்று வேடிக்கையாகக் கூறினார்.
குழந்தை மனம் கொண்ட சுவாமிகள் அதை உண்மையென்று நம்பிவிட்டார். ஜோசஃபைன் சென்ற பிறகு அவர் தமது உதவியாளரை அழைத்து அந்தத் திருடனை உடனே விட்டுவிடுமாறு கூறினார். அனைவரும் அவனை சுவாமிகளிடம் அழைத்து வந்தனர். அவர் சுவாமி புண்யானந்தரிடம் அவன் கங்கையில் குளிப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு கூறினார். குளித்து வந்தவுடன் அவனுக்குப் புத்தாடைகள் தரப்பட்டன. சுவாமிகள் அவனுக்கு வயிறு நிறைய உணவு வழங்குமாறும் துறவிகளைக் கேட்டுக் கொண்டார். சுவாமிகளின் கருணையால் அன்று அந்தத் திருடனுக்கு விடுதலை கிடைத்தது.
சுவாமி சிவானந்தர் சுவாமிஜி, சுவாமி பிரம்மானந்தர் ஆகியோரிடம் பெருமதிப்பு கொண்டிருந்தார். சில சமயங்களில், அவர் சுவாமி விவேகானந்தர் வாழ்ந்த அறைக்குச் சென்று அங்கே பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் பத்திரமாக உள்ளனவா என்று பார்ப்பார். ஒருநாள் அவர் சகோதரச் சீடர்கள் அனைவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் தானும் இருப்பதைப் பார்த்து, “ஓ, இவன் யார்? இங்கே நின்றுகொண்டிருக்கிறான். ஆம், மகான்களுடன் வாழ்ந்ததால்தானே இவனும் மகானாகிவிட்டான்” என்று பணிவுடன் கூறினார்.
ஒருநாள் சுவாமிகள் தமது படுக்கையில் மேற்கு நோக்கி அமர்ந்திருந்தார். கண்களை மூடி தியானம் செய்து கொண்டும், குருதேவரின் புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டும் இருந்த அவர் திடீரென்று தலையை உயர்த்தி, அருகில் நின்ற மாமரத்தைப் பார்த்தபடியே உதவியாளர்களிடம் உரத்த குரலில், “இதோ பாருங்கள், என்னில் பெரும் ஆன்மீக ஆற்றல் சேர்ந்துள்ளது. நான் இப்போது இந்த மாமரத்தைப் பார்த்து, ‘நீ இப்போதே முக்தி அடைவாய்!’ என்று கூறினால் போதும் அதற்கு முக்தி கிடைத்துவிடும்” என்று கூறினார்.
மூப்பும் நோயும் உடம்பை வெகுவாகப் பாதித்தபோதிலும் மடத்து நிர்வாகத்தில் மிகுந்த அக்கறை காட்டினார் சுவாமிகள். அதிலும் குருதேவரின் பூஜை, சேவை முதலியவற்றில் சிறந்த கவனம் செலுத்தினார். குருதேவர் உயிருணர்வுடன் நடமாடுவதைக் காண்பவர் அல்லவா அவர்! “பேலூர் மடத்தில் குருதேவர் வாழ்ந்துவருகிறார். சுவாமிஜி அல்லவா அவரை இங்கே பிரதிஷ்டை செய்துள்ளார்! குருதேவர் இங்கே இருப்பது மறுக்க முடியாத உண்மை” என்பார் சுவாமிகள்.
பூஜாரி துறவியிடம் சுவாமிகள் கூறினார்: “பூஜை நிறைவுற்றதும் குருதேவர் மீதுள்ள ஓரிரு ஸ்தோத்திரங்களை ஓது. பிற்பகலில் பூ கட்டுகிறாய்; பல மாலைகள் கட்டுவதற்குப் பதிலாக ஒரே ஒரு மல்லிகை மாலை கட்டு. மீதி நேரத்தில் ஜபதியானம் செய், சாஸ்திரங்களைப் படி. கோடை காலத்தில் குருதேவரைத் தூங்கச் செய்த பிறகு கொஞ்ச நேரம் வீசு.”
சுவாமி நிகிலானந்தர் கூறுகிறார் : “கோயில் தரையைச் சுத்தப்படுத்துவது என்னுடைய வேலை. மழைக் காலத்தில் தெற்கு வராந்தாவில் மழை நீர் தேங்கிவிடும். ஒருநாள் நான் அதனைக் கவனிக்காமல் விட்டுவிட்டேன். தமது அறையிலிருந்து இதைக் கண்ட சுவாமிகள் என்னை அழைத்து, “இதோபார், குருதேவருக்கு இப்படியா சேவை செய்வது? மழைநீர் தேங்கியிருந்தால் அவரால் எப்படி சிரமம் இல்லாமல் நடக்க முடியும். அவருடைய பாதங்கள் நனைந்துவிடாதா? குருதேவர் இந்த வராந்தாவில் ஒவ்வொரு நாள் மதியமும் நடப்பதை நான் பார்க்கிறேன். எனவே தயவுசெய்து இந்த இடத்தை உடனே சுத்தம் செய். மகனே, அவருக்கு எந்தச் சிரமத்தையும் கொடுக்கக் கூடாது. இதில் கவனமாக இரு. அவர் நம் ஆன்மாவின் ஆன்மா, பிரபஞ்சத்தின் தலைவர். ‘அவர் மகிழ்ந்தால் பிரபஞ்சமே மகிழும்’ ” என்றார்.
குருதேவரின் புகைப்படத்தைக் காண்பித்து அவர் பக்தர்களிடம், “இதை வெறும் புகைப்படம் என்று எண்ணிவிடாதீர்கள். குருதேவர் அதிலிருந்துகொண்டு பக்தர்களின் குறைகளைக் கேட்கிறார்” என்று கூறுவார்.
மற்றொரு சமயம் சுவாமி சிவானந்தர் பக்தர்களிடம் பின்வருமாறு கூறினார்: “இந்த யுகத்திற்கு ஸ்ரீராமகிருஷ்ணரின் திருநாமம்தான் முக்தி அளிக்கும் ஒரே மந்திரம். ராமர், கிருஷ்ணர் ஆகிய இருபெரும் அவதாரங்களின் நாமங்கள் இந்தத் திருநாமத்தில் இணைந்துள்ளன. எனவே குருதேவரின் நாமத்தை உச்சரிப்பவர்கள் ராமர், கிருஷ்ணர் ஆகியோர்களின் மந்திரங்களை உச்சரிப்பதால் கிடைக்கும் பலன்களைப் பெறுவது நிச்சயம். துன்பப்படுபவர்களைக் கடைத்தேற்றவும், தவறான பாதையில் செல்பவர்களை நல்வழிப்படுத்தவுமே குருதேவர் அவதரித்தார். எளிய, அழகான ஆன்மீகப் பாதையை அவர் அனைவருக்கும் வகுத்துத் தந்துள்ளார்.”
துறவி ஒருவர் உடலை வருத்தித் தவம் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். கழுத்தளவு நீரில் நின்று ஜபம் செய்வது, நாள் முழுக்க சூரியனைப் பார்த்தவாறு மன ஒருமைப்பாட்டைப் பயிற்சி செய்வது ஆகியவற்றைப் பழகி வந்தார் அவர். பேலூர் மடத்து சன்னியாசிகளிடம் அவர், தாம் ரிஷிகேஷத்தில் வாழ்ந்தபோது செய்த கடும் தவங்களைப்பற்றிப் பெருமையாகக் கூறி மகிழ்வார். இந்தச் செய்தி சுவாமிகளின் காதுகளை எட்டியது. அவர் கூறினார்:
“உண்மையான தவம் எது தெரியுமா? கழுத்தளவு நீரில் நிற்பதோ, சூரியனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதோ இல்லை. மாறாக புகழ்ச்சி–இகழ்ச்சி, மரியாதை– அவமரியாதை, இன்பம்–துன்பம் இவற்றைப் பொருட்படுத்தாமல் இறைவனிடம் முழு மனத்தையும் நிலைக்கச் செய்வதும் தியானத்திலும் பிரார்த்தனையிலும் தன்னை இழப்பதும்தான் சிறந்த தவம். வெறுமனே உடலை வருத்துவது தவமாகாது.”
சுவாமிகள் பேலூர் மடத்து மேலாளராக இருந்தபோது, மடம்ச ம்பந்தப்பட்ட முக்கியமான விஷயங்களை அன்னை ஸ்ரீசாரதா தேவியிடம் கலந்து ஆலோசித்தே முடிவெடுப்பார். சுவாமிகள் அன்னையிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். ஒருமுறை பேலூர் மடத்து பிரம்மச்சாரி ஒருவர் ஏதோ தவறு செய்துவிட்டார். இதை அறிந்த மற்ற பிரம்மச்சாரிகள் அவரிடம் சுவாமி சிவானந்தர் கண்டிப்பானவர், விதிமுறைகள், கட்டுப்பாடுகள் போன்றவற்றில் சிறிதும் விட்டுக்கொடுக்காதவர், யார் தவறு செய்தாலும் அவர்களை மடத்தைவிட்டுத் துரத்திவிடுவார் என்றெல்லாம் சொல்லி அச்சுறுத்திவிட்டனர். இதனால் பயந்துபோன அந்த பிரம்மச்சாரி யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஜெயராம்பாடி சென்று அன்னை ஸ்ரீசாரதா தேவியிடம் தஞ்சம் புகுந்தார்.
அந்த பிரம்மச்சாரி சொன்ன அனைத்து விவரங்களையும் கேட்டுக்கொண்ட அன்னை சுவாமிகளுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், “இந்த பிரம்மச்சாரி ஏதோ தெரியாமல் தவறு செய்துவிட்டான். எங்கே மடத்தைவிட்டு வெளியேற்றி விடுவார்களோ என்று பயந்துபோய் அவன் நடந்தே என்னைப் பார்க்க ஜெயராம்பாடி வந்துவிட்டான். நான் அவனது தாயாக இருந்துகொண்டு எப்படி அவனை வெளியேற்ற முடியும்? அதனால் நீ அவனை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
கடிதம் கிடைத்தவுடன் சுவாமிகள் உடனே பதில் கடிதம் எழுதினார். அதன்படி அந்த பிரம்மச்சாரி எந்தப் பிரச்சினையும் இல்லாமல் மீண்டும் பேலூர் மடத்தில் அனுமதிக்கப்பட்டார். சுவாமிகள் அவரைப் பார்த்ததும் சிரித்துக்கொண்டே, “கடைசியில் நீ சுப்ரீம் கோர்ட்டுக்கே சென்று எனக்கு எதிராகப் புகார் செய்துவிட்டாயே” என்று கூறினார். சுவாமிகளைப் பொறுத்தவரையில் அன்னையின் தீர்ப்பே இறுதியானது. அன்னை எது சொன்னாலும் அதை அப்படியே சுவாமிகள் ஏற்றுக்கொள்வார். “உலகில் உள்ள பெண்களை எல்லாம் விழிப்படையச் செய்யவே அன்னை அவதரித்துள்ளார். அவருடைய மகிமையை ஆரம்ப காலத்தில் குருதேவரின் துறவிச் சீடர்களான நாங்கள்கூட அறிந்திருக்கவில்லை. குருதேவர் மட்டுமே அன்னையைப்பற்றி அறிந்திருந்தார். சுவாமிஜி ஓரளவிற்கு அன்னையின் அருமையை உணர்ந்திருந்தார். அவரது பரிபூரண ஆசிகளைப் பெற்ற பிறகுதான் சுவாமிஜியால் உலகை வெல்ல முடிந்தது” என்பார் அவர். அன்னையைப்பற்றிப் பேசும்போதெல்லாம் சுவாமிகள் தம்மை மறந்து கண்ணீர் சிந்திவிடுவார்.
இறுதி நாட்கள்
ஸ்ரீராமகிருஷ்ண லீலையில் தமது பங்கைச் சிறப்பாகச் செய்து முடித்தார் சுவாமிகள். அவர் குருதேவரின் ஆன்மீகச் செய்தியை மக்கள் மத்தியில் இதயபூர்வமாக எடுத்துச் சென்று பரப்பினார். ஒருநாள் அவர் தமது சொந்த உடலைச் சுட்டிக்காட்டி துறவி ஒருவரிடம், “இது சாதாரண உடல் அல்ல; இதன்மூலமாக இறையனுபூதி அடையப்பட்டதால் இந்த உடல் முக்கியத்துவம் பெறுகிறது. இது குருதேவரைத் தொட்டுள்ளது; அவருக்குச் சேவை செய்துள்ளது; அவருடன் வாழ்ந்துள்ளது. அவர் இந்த யுகத்திற்கான தமது அவதாரச் செய்தியைப் பரப்பும் சாதனமாக இவ்வுடலைப் பயன்படுத்திக் கொண்டார். இல்லையென்றால் இது வெறும் சதையினாலும் எலும்பினாலும் ஆன கூடு, அவ்வளவுதான். அவர் விருப்பப்பட்டால் இந்த உடல் இன்னும் கொஞ்ச காலம் வாழும். இல்லை என்றால் இல்லை. நான் குருதேவரின் அழைப்பிற்காக ஏங்குகிறேன். இன்னும் சொல்லப் போனால், அதற்காகவே காத்துக்கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.
சுவாமி சிவானந்தர் பூரண ஞானம் பெற்ற துறவியாவார். அவர் மற்றவர்களுக்குத் துறவின் லட்சியத்தை நினைவுபடுத்தும் வகையில், “காம காஞ்சனத் துறவு! உடல் இன்ப ஆசையையும், பொருள் ஆசையையும் துறக்க முடிந்தால் அதுவே போதுமானது. எல்லாவற்றிற்கும் மேல் துறவி எளிமையானவனாகவும் பிரம்மச்சரியத்தை வழுவாமல் கடைபிடிப்பவனாகவும் இருப்பது அவசியம். புனிதமும் களங்கமின்மையும் உங்கள் இரு கண்களாகட்டும்! குருதேவர் வஞ்சகத்தையும் கபடத்தையும் மட்டும் பொறுத்துக்கொள்ளவே மாட்டார். தவறாக நடந்துகொள்பவர்களும், வஞ்சக மனத்தினரும் இந்த இடத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. குருதேவர் அவர்களை மடத்தில் நீடித்திருக்க அனுமதிக்க மாட்டார். உண்மையானவர்களுக்கு மட்டுமே இங்கே இடம் உள்ளது.”
மென்மையான, இளகிய இதயம் கொண்டவரான சுவாமிகள் மடத்து உறுப்பினர்களிடம் ஓர் அன்பான தாயாக நடந்துகொண்டார். மலேரியா நோய் பரவியிருந்த சமயத்தில் அவர் சமையலறைக்குச் சென்று நோயாளிகளுக்குப் பத்திய உணவு தயாரிக்கச் சொல்வார். துறவி ஒருவர் நினைவுகூர்கிறார்:
“பேலூர் மடத்தில் உள்ள விருந்தினர் அறையில் தங்கியிருந்த மேலைநாட்டுப் பெண்மணி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை. நான் அன்னையின் கோயிலில் அமர்ந்திருந்தேன். அப்போது மடத்திலிருந்து சுவாமி சிவானந்தர் கையில் ஆரஞ்சுப் பழத்தை எடுத்துக்கொண்டு விருந்தினர் அறையை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தார். அவர் முகத்தில் அமைதி தவழ்ந்தது. தம்முள் மூழ்கியவராக அவர் நடந்துகொண்டிருந்தார். அந்தக் காட்சியை என்னால் மறக்க முடியாது.”
சுவாமிகளின் அன்பு வற்றாத ஊற்றாகப் பொங்கிப் பிரவகித்தது. அவர் மடத்தைச் சேர்ந்த ஒவ்வொரு பொருளும், மடத்திற்காகச் செய்யப்படும் ஒவ்வொரு பணியும் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு உரியது என்ற எண்ணத்தை எல்லோர் மனத்திலும் ஏற்படுத்த விரும்புவார். சிறுசிறு விஷயங்களில் கூட அதிக கவனம் செலுத்துவார். பல சமயங்களில் அவரே மடத்து வேலைகளிலும் ஈடுபடுவார். தோட்டக்காரன், மடத்துப் பசு, அங்கே பறந்து திரியும் பறவைகள் என்று அவருடைய அன்பு சரிசமமாக அனைவருக்கும் கிடைத்தது. தமது வளர்ப்பு நாயான கேலோவைச் சுட்டிக்காட்டி அவர், “கேலோ எனது நாய். நான் குருதேவரின் நாய்” என்று கூறுவார்.
ஒருநாள் இரவு அவர் தமது அறையில் தியானம் செய்து கொண்டிருந்தபோது ஒரு பூனை அவர் மேஜைமீது ஏறி, ‘மியாவ், மியாவ்’ என்று கத்தியது. சுவாமிகள் இருகரம் கூப்பி அதை வணங்கினார். அருகில் நின்றுகொண்டிருந்த உதவியாளரிடம் அவர், “பார்! அனைத்தையும் பேருணர்வாகக் காணும் நிலையில் என்னை வைத்துள்ளார் ஸ்ரீராமகிருஷ்ணர் . அறை, வாசல், படுக்கை, உயிருள்ள எல்லா ஜீவன்களிலும் மகத்தான அந்த பரம்பொருளின் இருப்பையும் அதன் திருவிளையாடலையும் காண்கிறேன்” என்று கூறினார்.
சுவாமிகளின் காலத்தில் குருதேவரின் செய்தி உலகம் முழுவதும் பரவியது. அவருடைய காலத்தை இயக்கத்தின் பொற்காலம் என்றுகூடச் சொல்வதுண்டு. 1932–ஆம் ஆண்டு ம- உயிர் நீத்தார். குருதேவரின் துறவிச் சீடரான சுவாமி சுபோதானந்தரும் அதே ஆண்டு மகாசமாதி அடைந்தார். குருதேவரின் பக்தர்கள் ஒவ்வொருவராகத் தம்மைவிட்டுப் பிரிந்துசென்றதால் சுவாமிகள் அடைந்த வேதனைக்கு அளவு கிடையாது. அவர் மிகவும் வருந்தியவராக, “ஏறத்தாழ எல்லோரும் போய்விட்டனர். இனி நான் யாருடன் பேசுவது?” என்று கூறினார். அவருடைய உடல்நிலை சீர்குலையத் தொடங்கியது.
வெளிநாட்டிலிருந்து வந்த பக்தர் ஒருவர் அவருடைய நிலையைக் கண்டு வருந்திக் கண்ணீர் வடித்தார். சுவாமிகள் அவரைத் தேற்றும் விதத்தில் பேசினார்: “புத்தர் உடலை உகுக்கப் போகும் சமயத்தில் அவருடைய அணுக்கத் தொண்டரான அனந்தர் வேதனையால் துடித்தார். அதைக் கண்ட புத்தர் அனந்தரிடம், ‘ஏன் அழுகிறாய் அனந்தா? இந்த வாழ்க்கை ஐம்பதோ அறுபதோ, மிஞ்சிப்போனால் நூறு வருடங்களோதான் நிலைத்திருக்கும். ஆனால் நான் இப்போது அடையப்போவது எல்லையில்லாத வாழ்க்கை. எனவே வருந்தாதே’ என்று கூறினார்.”
1933 ஏப்ரல் 25–ஆம் தேதி அவர் மூன்று பக்தர்களுக்கு மந்திர தீட்சை வழங்கினார். மதியம் பதினொரு மணியளவில் சாப்பிட்டார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே யாரும் எதிர்பாராத விதத்தில் அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டது. சுவாமிகளின் வலது பக்க உறுப்புகள் செயல் இழந்தன. அவர் பேசும் சக்தியை இழந்தார். இப்படியே ஒரு வருடம் அவர் சிரமத்துடன் காலம் கழித்தார். பேச்சும் நடமாட்டமும் இல்லாத நிலையில் சுவாமிகள் இடது கையால் சமிக்ஞை செய்தோ, பார்வையால் உணர்த்தியோ பக்தர்களுக்குத் தமது அன்பையும், நல் ஆசிகளையும் வழங்கினார். அந்த நிலையிலும்கூட ஸ்ரீராமகிருஷ்ணருக்குத் தினமும் செய்யப்படும் பூஜை பற்றிய அனைத்து விபரங்களும் அவருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். சுவாமிகள் ஒருமுறை, “எனது நாக்கை வெட்டி எறிந்தாலும் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்களையே பேசுவேன். அவருடைய திருநாமத்தை மட்டுமே உச்சரிப்பேன். என்னிடமிருந்து யாரும் அவருடைய நாமத்தையோ, அவரைப் பற்றிய சிந்தனைகளையோ விலக்க முடியாது” என்று கூறியிருந்தார்.
1934 பிப்ரவரி 18–ஆம் தேதி ஸ்ரீராமகிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. 20–ஆம் தேதி செவ்வாய் மாலை 5:36 மணிக்கு சுவாமிகள் மகாசமாதி அடைந்தார். உயிர் பிரியும் நேரத்தில்கூட அவர் முகம் ஆனந்தமாக இருந்தது. தலை முடிகள் அனைத்தும் விறைத்து நின்றன. இவை இரண்டும் புனிதமான அடையாளங்களாகக் கருதப்பட்டன.
சுவாமிகளின் வாழ்க்கை இறையுணர்வில் எப்போதும் திளைத்திருந்த மாமனிதரின் வாழ்க்கையாகும். அவர் ஒருநாள் துறவி ஒருவரிடம் மிகவும் பணிவாக, “இதோபார், நான் குருதேவரின் நாய். அது கொள்ளையர்களிடமிருந்து எஜமானுடைய விலைமதிப்பற்ற செல்வங்களைப் பாதுகாக்கிறது. அதேபோல் நானும் இந்த மடத்தில் குருதேவரின் செல்வங்களான பகுத்தறிவு, துறவு, ஞானம், பக்தி ஆகியவற்றைப் பாதுகாக்கிறேன். இங்கே நம்பிக்கையும், நன்றியும் உள்ள நாயாக வாழ்பவன் உயர் உண்மையை அடைவது நிச்சயம்” என்று கூறினார்.
1 இதுவே தற்போது ஊட்டியிலுள்ள ராமகிருஷ்ண ஆஸ்ரமம்.
Previous சுவாமி பிரம்மானந்தர்
Next சுவாமி பிரேமானந்தர்

<< Home